பகை நாடுகளான வடகொரியா – தென்கொரியா தலைவர்கள் இடையில் ஹாட்லைன் வசதி ..

ஐக்கிய நாடுகள் சபையின் தடையை தகர்த்து, அடுத்தடுத்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடுகளை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது சில மாதங்களாக மனம்மாறி வெள்ளைக்கொடி காட்டி வருகிறார்.

சமீபத்தில் தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவற்றின் மூலம் அனைவரின் புருவங்களை உயர வைத்தார்.

பேச்சுவார்த்தைக்கு வந்த தென்கொரிய பிரதிநிதிகளிடம் இப்போதைக்கு ஏவுகணை சோதனைகள் இருக்காது எனவும், அமெரிக்கா உடன் பேச தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்ததாக கூறப்பட்டது.

கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தைக்கு டொனால்டு டிரம்ப்பும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ள நிலையில் வரும் மே மாதத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையேயான பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக வடகொரியா அதிபர் கிம் ஹாங் உன் – தென்கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் நேருக்குநேர் சந்தித்துப்பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு பாதை அமைக்கும் வகையில் இருநாட்டு உயரதிகாரிகள் மட்டத்தில் கடந்த மாதம் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், வடகொரியா – தென்கொரியா தலைவர்கள் இடையில் ஹாட்லைன் தொலைபேசி சேவை தொடங்கியது. இந்த தொலைபேசி வசதி மூலம் இருநாட்டு உயரதிகாரிகளும் முதன்முறையாக 4 நிமிடங்கள் 19 வினாடிகள் பேசியதாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.