உடல் சோர்வு, வலி, மன அழுத்தம் இருந்தால் அதனை போக்குவதற்கு மசாஜ் செய்வார்கள், வாரத்திற்கு ஒருமுறையாவது மசாஜ் செய்து வந்தால் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
எண்ணெய் மசாஜ், ஆயுர்வேத மசாஜ், அக்குபிரஷர் மசாஜ் என பல மசாஜ் வகைகளை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் கத்தி மசாஜ் பற்றி தெரியுமா?
ஆம் இறைச்சி வெட்டும் கத்தி மூலம் மசாஜ் செய்வது தற்போது பிரபலமாகி வருகிறது, தைவானின் வடக்கில் உள்ள ஹிசின்சு எனும் நகரத்தில்தான் இது நடக்கிறது.
யாரேனும் தெரியாத நபர் அங்கு சென்றால் மசாஜ்கள் பார்த்து பீதியாகி விடலாம்.
சிகிச்சை பெற வரும் வாடிக்கையாளர்களை 5 அல்லது 6 சீருடை அணிந்த பணியாளர்கள் வரிசையாக சடலம் போல முழுவதுமாய் துணிகளால் மூடி படுக்க வைத்து, அவர்கள் மேல் சீரான வேகத்தில் கத்தியை இறக்குவதும் எடுப்பதுமாக இருப்பார்கள், இதற்கு $7 கட்டணம் வசூலிக்கிறார்கள்.
கத்தி மசாஜின் வரலாறு
இந்த சிகிச்சையின் பெயர் Dao Liao, இது இன்றைக்குப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிகிச்சை முறை அல்லவாம்.
சீன வரலாற்றில் கி.மு. 770 முதல் கி.மு. 476 வரை அப்போதிலிருந்தே இந்த சிகிச்சைகள் நடைபெற்று வந்திருக்கின்றன.
வித்தியாசமான குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பாரம்பரிய மருந்துகளால் எளிதில் சிகிச்சை பெறமுடியாது.
ஆகவே கத்தியைக் கொண்டு தங்கள் நோய்களைக் குறைக்க பௌத்த பிக்குகளை கேட்டுக்கொள்வார்கள் என்று இந்த Dao Liao சிகிச்சையின் வரலாறை கூறுகிறார் வு வேய் சுவான்.
அசம்பாவிதம் ஏதுமில்லை
கத்தி கொண்டு முகம் மற்றும் உடல் முழுதும் வேகமாக செய்யப்படும் இந்த வகை மசாஜ்களால் இதுவரைக்கும் ஒரு சிறு காயமோ ரத்தமோ ஏற்பட்டதில்லையாம்.
சில நேரங்களில் மசாஜ் செய்யும்போது அசந்து தூங்கிவிடும் வாடிக்கையாளர்களும் உண்டாம். அத்தனை மிருதுவாக இந்தக் கத்தி மசாஜ் செய்யப் படுகிறது.
மேலும் இந்த மசாஜ் செய்யும் பணியாளர்கள் புத்த மதத்தை சேர்ந்தவர்களாகவும் மாமிசம் உண்ணாமலும் இருக்க வேண்டும் என்பது முக்கிய விதியாகும்.
கத்தியை தயார் செய்வது எப்படி?
கத்தியின் கூர்முனைகளை ஈரமான கல்லில் தேய்த்து மழுங்க செய்து பின் அயோடினை கத்தி முழுவதிலும் தடவிவிட்டு கத்தியை தயார் செய்கிறார்களாம்.
இவர்களின் கத்தி வீச்சுகளை எதிர்கொள்ள கொஞ்சம் மனோ தைரியம் தேவை என்றாலும் இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
- ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து உங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும்.
- சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
- உடலில் உள்ள எதிர்மறை சக்தியை நீக்குகிறது
- உடலில் உள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளைத் திறந்து விடுகிறது.
- தசைப் புண்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
- உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும் உதவி செய்கிறது.