கடல் சீற்றம் காரணமாக, இரண்டு நாள்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் எச்சரித்துள்ளார்.
கடற்கரைப் பகுதிகளில் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும் வேடிக்கை பார்க்கும் நோக்கிலும் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப்.21), ஞாயிற்றுக்கிழமை (ஏப்.22) ஆகிய இரண்டு நாள்களும் கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்படும் என இந்திய தேசிய கடல் சார்பு தகவல் சேவை மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கடலோரத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 21) காலை 8.30 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்.22) இரவு 11.30 மணி வரையில் 18 முதல் 22 விநாடிகள் இடைவெளியில் 2.5 முதல் 3.5 மீட்டர் வரை ( அதாவது 8.25 முதல் 11.50 அடி) உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்து சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடல் சீற்றத்தின் காரணமாக, கடற்கரை பகுதிகளில் இதன் தாக்கம் பெரிதாக இருக்கும். எனவே கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் படகுகள் செல்ல வேண்டாம். படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு சேதமடைவதைத் தவிர்க்கும் வகையில் படகுகளை போதிய இடைவெளியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
கடற்கரைப் பகுதிகளில், பொதுமக்கள் எவரும் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும், வேடிக்கை பார்க்கும் நோக்கிலும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.
கடற்கரையிலிருந்து கடலுக்குள் படகுகள் செல்ல வேண்டாம். கடலிலிருந்து கடற்கரைக்கு படகுகள் வர வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு தகவல்: இந்த எச்சரிக்கை வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் தமிழக அரசுக்குக் கிடைத்தது. உடனே கடலோர மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமல்லாது அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டு, அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடல் சீற்றம் ஏற்படும் போது சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சொல்ல முடியாது.கடலோப் பகுதிகளில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் அரசு அறிவிக்கும் அறிவிப்புகளை பொது மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது என்று சத்யகோபால் கூறினார்.
இந்த எச்சரிக்கை தொடர்பாக அண்டைய பிரதேசமான இலங்கையின் பாதிப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.