ரஜினியின் கட்சிக்குப் படையெடுக்கும் பிரபலங்கள்!

ரஜினி புதிதாகத் தொடங்கவுள்ள கட்சியில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சேர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியின் மெளனம் அவரை எதிர்க்கின்றவர்களை யோசிக்க வைத்திருக்கிறது. அதேசமயம் அமைதியாக மாநிலச் செயலாளர் ராஜு மகாலிங்கமும், பொறுப்பாளர் சுதாகரும் தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் செய்து ரஜினி மக்கள் மன்றத்தைப் பலப்படுத்தி வருகின்றனர். மன்றத்தின் கட்டமைப்பை வலுவாக உருவாக்கி வருகின்றனர். முதலில் மாவட்டப் பொறுப்பாளர்களை மட்டும் அறிவித்தனர். அடுத்தகட்டமாக நகரம், ஒன்றியம், கிளைகள், பகுதி, வார்டு என்று தனித்தனியாக நிர்வாகிகளின் நியமனம் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.

முக்கியமாக தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக்கில் தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் வேலையும் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. அ.தி.மு.க-வில் இருந்த பல பெரிய தலைவர்கள், தி.மு.க-வில் ஸ்டாலின் தலைமை பிடிக்காமல் அதிருப்தியடைந்துள்ள பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் ரஜினி தொடங்கவுள்ள கட்சியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.