சர்ச்சைகளால் குழப்பமடையும் தென்னிலங்கை!

சமகால அரசியல் நகர்வுகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான ஐக்கிய தேசிய கட்சியின் உட்பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் கட்சியின் தீர்மானங்களுக்கு அமைய இம்மாத 30 ஆம் திகதிக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியை மறுசீரமைக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாவிடின் கட்சியின் 50 உறுப்பினர்கள் இணைந்து கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும் எனவும் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, பிரதமரிடம் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கட்சித் தலைமைத்துவத்தில் இருந்து ரணில் பதவி விலகுவது, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை தீர்மானம் செய்வது, உட்பட பல நிபந்தனைகளை ரணில் விக்ரமசிங்க நிறைவேற்ற வேண்டும் என குறித்த 50 பேர் அடங்களான குழு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், கட்சியில் உயர் மட்டங்கள் ரணிலை தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக வைத்துக்கொள்ளவே தீர்மானித்துள்ளதாகவும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணிலை களமிறக்கவுமே திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவை களமிறக்க ராஜபக்ஷர்கள் தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் காரணமாக அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளில் பல்வேறு குழப்ப நிலைகள் ஏற்படால் என அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.