காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் அதுவரை ஐ.பி.எல் போட்டிகளைச் சென்னையில் நடத்தக் கூடாது என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லாவரத்தில் நடந்த போராட்டத்தின்போது மன்சூர் அலிகான்மீது பல பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைதுசெய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இந்தக் கைதின் பின்னணிக் குறித்து ஆணையரை சந்தித்து விசாரிக்க சென்னை ஆணையர் அலுவலகம் வந்திருந்தார் சிம்பு.
“மன்சூர் அலிகானின் மகன், சிறுநீரக அறுவை சிகிச்சையிலிருந்து குணமடையாத அப்பா சிறையில் உயிருடன் இருக்கிறாரா என்று கூறியதைக்கேட்டு மனவேதனையில் இங்கு வந்துள்ளேன்” என்று கூறி உள்ளே சென்ற சிம்பு, இணை ஆணையர் (உளவுத்துறை)யை சந்தித்து மன்சூர் அலிகான் வழக்கைப் பற்றிக் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிம்பு, “மன்சூர் புதன்கிழமை ரிலீஸ் செய்யப்படுவார் என்று கூறியுள்ளனர். மன்சூரை அவரின் குடும்பத்தார் சிறையில் சென்று பார்க்க வசதி செய்து தரப்படும் என்று உறுதியளித்துள்ளனர்” என்றார்.
காவிரி மேலாண்மை பிரச்னையில் மத்திய அரசின் நிலைப்பாடு, மாநில அரசுகளின் கைது நடவடிக்கையைப் பற்றிய கேள்விக்கு, “மாநில அரசு, மத்திய அரசு பற்றி எனக்குத் தெரியாது. சிம்புவை அரசியல்வாதியாகவே பார்க்கிறீர்கள். எனக்கு மாநில அரசு என்றாலே என்னவென்று தெரியாது” என்று ஆவேசமாகக் கிளம்பினார் சிம்பு.