நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேசை, மீண்டும் எப்படி நம்புவது?
”உள்ளூராட்சி தேர்தலின் போது எங்களை நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேஸ் பிரேமசந்திரனை நம்பி எவ்வாறு ஒரு புதிய கூட்டுக்கு போக முடியும்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்புள்ளார்.
இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், “எங்களோடு உள்ளூராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சுரேஷை கேட்ட போது அதற்கு சம்மதம் தெரிவித்த அவர், இறுதியாக உதய சூரியனில் போட்டியிட வேண்டும் என்று கூறினார்.
அதற்கு மோசமான கொள்கையுடைய கட்சியோடு இணைய போவதில்லை என்று கூறினேன். தேர்தல் அறிவிக்கப்பட்டதால் புதிதாக கட்சி மற்றும் சின்னம் தேட முடியாது, ஆகையால் ஈ.பி.ஆர்.எல்.எவ் சின்னத்தில் போட்டியிடலாம் என்று கூறினேன்.
அதற்கு மறுப்பு தெரிவித்து இறுதிவரை எங்களோடு பேசிக்கொண்டே இருந்தார்.
இந்த பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கு போது சுரேஷ் உதய சூரியனில் போட்டியிட போவார் என்று தெரியாது. பத்திரிகையில் பார்த்து தான் அறிந்து கொண்டேன். எமக்கு நம்பிக்கை கொடுத்து நடுத்தெருவில் விட்டவர் அவர்.
தூய்மையான அரசியல், நடந்து கொள்ளும் விதம் என்பன ஒரு கூட்டுக்கு மிக முக்கியம். ஒன்று சேர்ந்த பின்னர் போட்டித்தன்மை இருக்க முடியாது. ஆனால் இவ்வாறு நடந்து கொண்ட சுரேஷை எவ்வாறு நாங்கள் இனி நம்புவது?
சுரேஷ் தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, மகிந்தவின் கட்சி ஆகியவற்றுடன் வவுனியாவில் கைகோர்த்து எங்களுக்கு எதிராக செயற்பட்டார்.
இதற்கும் தமிழ்த் தேசியவாதத்துக்கும் என்ன தொடர்பிருக்கின்றது? எனவும் கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.