யாழ்ப்பாண மாநகரசபைக்கு உட்பட்ட யாழ்ப்பாண மையப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கலாசாரச் சீர்கேடான பல விடயங்கள் இடம்பெறுகின்றன.
எனவே இந்தச் செயற்பாடுகளை உரிய தரப்பினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நகருக்கு வந்து செல்லும் பலரும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுவரும் மருத்துவபீட விசேட சிகிச்சைப் பிரிவுக்கு சொந்தமான கட்டடத்துக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதிக்குப் பின்பாகவே இவ்வாறான சீர்கேடுகள் அரங்கேறுகின்றன.
அந்தப் பிரதேசத்தில் மது அருந்துதல், புகைத்தல், போதைப் பொருள்களின் பாவனை போன்ற சீர்கேடான விடயங்கள் பலவும் இடம்பெறுகின்றன. அத்துடன் மதுபானப் போத்தல்களும், சிகரட் பகுதிகளும், பாக்கு துப்பல்களுமாக அந்த இடம் அசிங்கப்படுத்தப்படடு்ள்ளன.
அங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையிலிருந்தும் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இரவு நேரங்களிலே அங்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகிறது.
எனவே இந்தச் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப் பட்டு நகர் பாதுகாக்கப்படவேண்டும். இந்தச் செயற்பாடுகள் மேலும் அங்கு இடம்பெறுமானால் பல விளைவுகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு.
அதிகாரிகள் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றனர். “இவை அனைத்தும் சட்டவிரோதமாகவே இடம்பெறுகின்றன. மாநகர சபைக்குட்பட்ட பிரதேசமாக இருப்பினும் நாம் இந்த இடங்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
இது தொடா்பாக எமக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. உரிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளோம். முன்புறமாக உள்ள கடைகள் அகற்ற நடவடிக்கை மேற் கொள்ளப்படுகின்றன.
அத்துடன் முன்புறமாக தரிக்கப்படும் பேருந்துகளும் இனி அவ்விடத்தில் நிறுத்தாமல் செய்யப்படவுள்ளது” என்று யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் தெரிவித்தார்.