சென்னையில் கோவிலில் வைத்து மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பூசாரியை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
சென்னை சூளைமேட்டில் வசிக்கும் மூன்றரை வயது சிறுமி கண்ணகி தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.
அதே தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது கோவில் பூசாரியான உதயகுமார் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மிரண்டு போன குழந்தை வீட்டுக்கு வந்து அழுதுள்ளது. பெற்றோர் விசாரித்த போது கோவில் பூசாரி தன்னை கிள்ளிவிட்டதாக கூறியதால் உஷாரடைந்த பெற்றோர் சிறுமியிடம் நடந்த சம்பவங்களை கேட்டறிந்தனர்.
பூசாரி தொடர்ச்சியாக சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பொதுமக்களிடம் உதயகுமாரின் அத்துமீறலை கூறிய போது அவன் அதே பகுதியில் சிறுமிகளைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று கூடி உதயகுமாரை அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர். சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கின் விசாரணை மாற்றப்பட்டது.
இதனையடுத்து பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பூசாரி உதயகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அவசரச் சட்டம் இயற்றியுள்ள நிலையிலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் நடைபெற்று வருவது பெற்றோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.