வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னுக்கும், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுக்கும் இடையே ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறவுள்ள நேரடி உச்சி மாநாடு உலக அளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த இரண்டு நாடுகளும் பிற வழிமுறைகள் மூலம் நீண்ட காலமாக தகவல்களை பரிமாறி வந்துள்ளன.
வட கொரியாவும், தென் கொரியவும் தகவல் அனுப்புவதில் கட்டுப்பாடுகளை கொண்டிருந்தாலும், பல ஆண்டுகளாக இருதரப்பும் தங்களின் எல்லையை தாண்டி தகவல்களை அனுப்பிதான் வந்துள்ளன.
பரப்புரை செய்திகள் முதல் அதிகாரபூர்வ தகவல்கள் வரை இந்த இரு நாடுகளிலும் பரிமாறப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாடும் பிற நாட்டு மக்களை இலக்கு வைத்து வழக்கத்திற்கு மாறான சில முறைகளில் இந்த தகவல் பரிமாற்றங்களை மேற்கொண்டு வந்துள்ளன.
பலூன்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள்
வட கொரியாவுக்கு எதிரான தகவல்களை பலூன்களில் கட்டப்பட்ட துண்டு பிரசுரங்களின் மூலம் செயற்பாட்டாளர்கள் அனுப்பியுள்ளனர்.
வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளின் நிறுவனங்களும் அச்சிடப்பட்ட தகவல்களை குறிப்பாக துண்டு பிரசுரங்கள் மூலம் அடுத்த நாட்டிலுள்ள குடிமக்களை இலக்கு வைத்து அனுப்புவதில் திறமை வாய்ந்தவைகள்.
இரு நாடுகளுக்கு இடையில் நிலவுகின்ற எல்லை கட்டுப்பாடுகள், பலூன்கள் போன்ற புதுமையான வழிமுறைகளில் செய்திகளை பரவ செய்யும் வழிகளை கண்டறிந்து செயல்படுத்த வழிகாட்டியுள்ளன.
வட கொரியாவில் இருந்து தப்பியோடியவர்களால் தொடங்கப்பட்டவை உள்பட வட கொரியாவுக்கு எதிரான நிறுவனங்கள், தென் கொரியாவில் இருந்து பலூன்கள் வழியாக வட கொரிய ஆட்சியை விமர்சிக்கும் துண்டு பிரசுரங்களை அடிக்கடி அனுப்பியுள்ளன.
2015ம் ஆண்டு வானிலிருந்து துண்டுபிரசுங்கள் போடப்பட்டதை “போர் அறிவிப்பு” என்று வட கொரியா அரசு நடத்துகின்ற உரிமின்கோக்கிரி இணையதளம் விவரித்தது.
நாட்டின் எல்லை கடந்து துண்டுபிரசுரங்கள் விநியோகம் பற்றிய வட கொரியாவின் எதிர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், வட கொரியாவுக்கு ஆதரவான துண்டு பிரசுரங்கள் தென் கொரியாவில் அதிகமாகவே காணப்பட்டன. 2017ம் ஆண்டு சோலில் இருக்கும் அதிபர் அலுவலகம் வரை அவை சென்று சேர்ந்திருந்தன.
வானொலி மற்றும் தொலைக்காட்சி
வட கொரிய வானொலி உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு செய்திகளை வழங்குகின்றன.
வட கொரியாவில் வானொலி சேவைகள் பிரபலமாக இருப்பது, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் செய்திகளை ஒலிபரப்புவதற்கு வசதியாக உள்ளது. ஆனால், இதுவே உள்நோக்கம் இல்லாமலேயே வெளிநாட்டு ஒலிபரப்பு நிறுவனங்களுக்கு சன்னலை திறந்துள்ளது.
வானொலிகள் முற்றிலும் அரசு அலைவரிசைகளாக மாறியுள்ளதால், அரசு வெளிநாட்டு ஒலிபரப்பு சமிக்ஞைகளை தடுத்துவிடுகிறது. ஆனால், ரகசியமாக சமிக்ஞைகளை பெற்றுகொள்ளக்கூடிய வானொலிகளால் வெளிநாட்டு ஒலிபரப்புகளை பெற முடிகிறது.
இவற்றில், அரசு நடத்தி வருகின்ற கொரிய ஒலிபரப்பு அமைப்பு போன்ற தென் கொரிய சேவைகள் மற்றும் பிபிசி கொரியா, ஃபிரீ ஆசியா வானொலி மற்றும் வாய்ஸ் ஆப் அமெரிக்காவின் கொரிய சேவை போன்ற வெளிநாட்டு சேவைகள் அடங்குகின்றன.
ஃபிரீ வட கொரிய வானொலி மற்றும் வட கொரிய சீர்திருத்த வானொலி போன்ற வட கொரியாவில் இருந்து தப்பி சென்றவர்கள் தென் கொரியாவில் இருந்தும் சேவைகளை நடத்தி வருகின்றனர்.
தேர்வு செய்யப்பட்ட தகவல்களை வானொலி நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கும் வட கொரியா ஒலிபரப்புகளை கொண்டுள்ளது.
வாய்ஸ் ஆப் கொரியா சேவை வட கொரியாவின் சர்வதேச சேவையாக பல மொழிகளில் ஒலிபரப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இன்னொரு சேவையான டோன்ஜில் வாய்ஸ் என்பதும் கொரிய மொழியில் வானொலி மற்றும் போட்காஸ்ட் ஒலிபரப்புகளை மேற்கொண்டு வருகிறது.
தொலைக்காட்சி ஒளிபரப்புகள் இருந்தாலும், வானொலி நிலையங்கள் போல அதிகமாக அணுக முடியாத நிலையில் உள்ளன.
இதற்கும் அப்பாற்பட்டு, வட கொரியாவில் முறையற்ற வகையில் தென் கொரியா தங்களுடைய அடையாளங்களை அவ்வப்போது பதிக்கும் படியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் ஒளிப்பரப்பி வருகிறது.
ஒலிபெருக்கி பரப்புரை
தகவல் பரிமாற்றம் மற்றும் இசையோடு வட கொரிய படையினரை தென் கொரியா இலக்கு வைக்கிறது.
தங்களுடைய வலிமையை எடுத்துக்காட்டவும், ஒன்று மற்றதன் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளை விமர்சனம் செய்யவும், மிக கடுமையாக பாதுகாக்கப்படுகின்ற எல்லைக்கு அருகில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி கொள்ளும் நீண்டகால வரலாறு வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் உள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வட கொரியாவின் மோசமான மனித உரிமை பதிவுகளில் முக்கிய கவனம் செலுத்தி தென் கொரியாவின் ஒலிபெருக்கிகள் தகவல்களை அறிவிக்கின்றன. ஆனால், வட கொரிய படையினரின் கவனத்தை ஈர்ப்பதற்கு இசையையும் தென் கொரியா ஒலிபரப்புகிறது.
தங்கள் நாட்டின் கம்யூனிச செய்திகளில் அழுத்தம் வழங்குகின்ற வட கொரிய ஒலிபெருக்கிகள், குறிப்பாக தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற அதன் கூட்டாளி நாடுகளுக்கு கண்டன தகவல்களை தெரிவிக்கின்றன.
2018 ஆம் ஆண்டு வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான தற்காலிக பகை நிறுத்தம், இரு நாடுகளுக்கிடையில் உள்ளடக்கத்திலும், தொகுதி அளவிலும் ஒளிபரப்பைக் குறைக்க வழிவகுத்தது.
எல்லை தகவல் பரிமாற்றம்
கொரிய போர் நிறுத்த கிராமத்தில் தகவல் தொடர்பு ஹாட்லைன் தொலைபேசி இணைப்பு செயல்பட்டு வருகிறது.
பன்முன்ஜாம் போர் நிறுத்த கிராமத்தில் தகவல் பரிமாற்ற ஹாட்லைன் தொலைபேசி வசதியை வட கொரியாவும், தென் கொரியாவும் செயல்படுத்தி வருகின்றன. சுமார் 2 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த சேவை 2018ம் ஆண்டு மீட்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது.
தென் கொரிய மற்றும் வட கொரிய செஞ்சிலுவை சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக 1971ம் ஆண்டு இவ்விரு நாடுகளுக்கு இடையே நேரடி தொலைபேசி வசதி உருவாக்கப்பட்டது. தற்போது இவ்விரு நாடுகளுக்கு இடையில் 33 தொலைபேசி இணைப்புகள் வரை உள்ளன.
ஒவ்வொரு தரப்பும் பச்சை மற்றும் சிவப்பு தொலைபேசிகள், ஒரு கணினி திரை மற்றும் ஒரு தொலைநகல் இயந்திரம் கொண்ட ஒரு பணியகத்தில் இருந்து தொடர்புகொள்கிறது. பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு முறை தொலைபேசி அழைப்பு வருகிறது.
தென் மற்றும் வட கொரிய கூட்டு தொழில்துறை வளாகம் ஒன்றை தென் கொரியா 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூடியதை தொடர்ந்து, வட கொரியா இந்த ஹாட்லைன் தொலைபேசி வசதியை துண்டித்தது.
2018ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஹாட்லைன் வசதியை மீட்டு மீண்டும் செயல்பட செய்தது, தென் கொரியா நடத்திய பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்க செய்த கூட்டங்களை நடத்துவதற்கு முக்கிய பங்காற்றியது.
பிற தகவல் பரிமாற்றங்களுக்கு, எல்லையிலுள்ள படையினர், மேலதிக நேரடி முறையையே நாட வேண்டியுள்ளது.
அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் நடைபெறுகின்ற கூட்டு ராணுவ பயிற்சி பற்றி தெரிவிக்க மார்ச் 20ம் தேதி எல்லையிலுள்ள வட கொரிய துருப்புகளுக்கு ஓர் அறிக்கை மிகவும் சத்தமாக வாசித்து அறிவிக்கப்பட்டது.
வட கொரியாவொடு தகவல் பரிமாற்ற முறை எதுவும் இல்லாத ஐக்கிய நாடுகள் கட்டளை நிர்வாக அதிகாரி இதனை செய்தது மிகவும் முக்கியமாக சமீபத்தில் எடுத்துக்காட்டப்பட்டது.
தலைவர்களுக்கு ஹாட்லைன் வசதி
வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் பேசி கொள்வதற்கு நேரடி ஹாட்லைன் தொலைபேசி வசதி பொருத்தப்பட்டுள்ளது.
வட மற்றும் தென் கொரிய உச்சி மாநாட்டை முன்னிட்டு, வரலாற்றிலேயே முதல்முறையாக இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் ஏப்ரல் 20ம் தேதி நேரடி ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சோலில் இருக்கும் தென் கொரிய அதிபர் அலுவலகத்தையும், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் தலைமை தாங்கி வழிநடத்துகிற அரசு விவகார ஆணைய அலுவலகத்தையும் இந்த ஹாட்லைன் வசதி இணைக்கிறது.
இந்த நேரடி தொலைபேசி வசதி தகவல் பரிமாற்றங்களை உருவாக்கி, தவறான புரிதல்களை தவிர்த்து பதற்றங்களை தணிக்கும் என்று தென் கொரிய அதிபர் அலுவலக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உச்சி மாநாட்டுக்கு முன்னர் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்த உள்ளனர். ஆனால், இந்த தொலைபேசி உரையாடலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.