யாருக்கும் பயப்படமாட்டேன்!’ சவால் விட்ட இன்ஸ்பெக்டர் கைது!

தந்தையை இழந்த காரைக்காலைச் சேர்ந்த ராஜலெட்சுமி என்பவர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராணியிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், “தேரிழந்தூரைச் சேர்ந்த செந்தில் என்பவருடன் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி எனக்குத் திருமணம் நடந்தது.

ஆனால், என் கணவர் எந்த வேலைக்கும் செல்லாமல் திருமணத்தின்போது என் குடும்பத்தார் எனக்கு அளித்த 28 சவரன் தங்க நகை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சணைப் பணத்தைச் செலவு செய்ததோடு, என் தாயார் வீட்டிலிருந்து மீண்டும் பணம், நகை வாங்கி வருமாறுகூறி என்னைக் கணவரும், அவர்கள் வீட்டாரும் துன்புறுத்துகிறார்கள்” என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரின்பேரில் ராஜலெட்சுமியின் கணவர் செந்தில், மாமியார் கன்னிகா, கணவரின் இரண்டு சகோதரிகள் ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் பெண்கள் வன்கொடுமைச் சட்டங்களின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதில், செந்திலின் சகோதரிகள் இருவரையும் இரவோடு இரவாகக் கைதுசெய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துவிட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி.

இந்தக் கைது நடவடிக்கைக்காக ராஜலெட்சுமியிடமிருந்து ஆறாயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கியிருக்கிறார் இன்ஸ்பெக்டர் ராணி. அதன்பின் எதிர்த்தரப்பினரிடம் ஒருதொகை மற்றும் பொருளை பேரம்பேசிக் கொண்டு முதல்கட்டமாக 10 சவரன் நகையையும் மற்றும் சீர் பொருள்களையும் ராஜலெட்சுமிக்கு வாங்கித் தந்திருக்கிறார்.

மீதி நகையை மே 1-ம் தேதி வாங்கித் தருவதாக உறுதியளித்திருக்கிறார் இன்ஸ்பெக்டர்.

Rani_Inspector_1_12584  யாருக்கும் பயப்படமாட்டேன்!' சவால் விட்ட இன்ஸ்பெக்டர் ராணி லஞ்சப்புகாரில் கைது Rani Inspector 1 12584

அதன்பின், “மீதமுள்ள நகையை நீங்கள் கொடுக்க வேண்டாம். இந்த வழக்கை கிடப்பில் போடுகிறேன். அதற்கு எனக்கு எலெக்ட்ரானிக் குக்கரும், 30 ஆயிரம் ரூபாய் பணமும் தாருங்கள்” என்று செந்திலின் சகோதரர் குகனிடம் இன்ஸ்பெக்டர் பேரம் பேசியிருக்கிறார்.

“இல்லையென்றால் அனைவரையும் கைதுசெய்து சிறையில் அடைப்பேன்” என்று மிரட்டியுள்ளார். இதனால், முதல்கட்டமாக நான்காயிரம் ரூபாய் மதிப்பிலான குக்கரை வாங்கிக் கொடுத்து ராணியின் நன்மதிப்பை பெற்ற குகன், அடுத்தகட்டமாக காவல்துறையில் உள்ள ஒரு உயர் அதிகாரியின் ஆலோசனைப்படி, நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்திருக்கிறார்.

Rani_Inspector_12399_13089  யாருக்கும் பயப்படமாட்டேன்!' சவால் விட்ட இன்ஸ்பெக்டர் ராணி லஞ்சப்புகாரில் கைது Rani Inspector 12399 13089

Rani_Inspector

இன்ஸ்பெக்டர் ராணி மீது ஏற்கனவே பல புகார்கள் குவிந்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புப் போலீஸார் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி நாகை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. காந்திமதிநாதன், இன்ஸ்பெக்டர் ரெத்தினவள்ளி மற்றும் போலீஸார் மாறுவேடத்தில் சூழ்ந்திருக்க, ரசாயனப் பொடி தடவிய ரூ.30 ஆயிரம் பணத்தை இன்ஸ்பெக்டர் ராணியிடம் செந்திலின் சகோதரர் குகன் கொடுத்தபோது, அவரைக் கையும் களவுமாகப் பிடித்து லஞ்சஒழிப்பு போலீஸார் கைதுசெய்தனர்.

சுமார் ஏழு மணிநேர விசாரணைக்குப் பின், ராணி தங்கியிருந்த காவலர் குடியிருப்பில் குகன் லஞ்சமாக வாங்கிக் கொடுத்த குக்கரைக் கைப்பற்றியதோடு, தஞ்சை கரந்தட்டான்குடியில் உள்ள ராணியின் வீட்டையும் சோதனையிட்டனர். அங்கிருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

“யாரையும் நான் மதிக்கமாட்டேன். காரணம், என் மடியில் கனமில்லை. அதனால் எனக்குப் பயம் இல்லை” என்று பேசிவந்த இன்ஸ்பெக்டர் ராணி, பொதுமக்கள் சூழ்ந்திருந்தபோது, தலை குனிந்தபடியே சிறைக்குச் சென்றார்.

அதேநேரத்தில் கணவனால் பாதிக்கப்பட்டு, கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண் ராஜலெட்சுமிக்கு அவருடைய கணவர் வீட்டிலிருந்து வந்துசேர வேண்டிய எஞ்சிய நகைகள் திரும்பக் கிடைத்திடத் தேவையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?