தமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம் – வட.மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் பலரின் குருதியில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்தான். அங்கு இரத்தம் தேவைப்படும் போது, இராணுவத்தினரே அதனை வழங்குகின்றனர் என வட.மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றே விரும்புகின்றனர். தென்னிலங்கையில் பௌத்த விகாரைகளில் இந்துத் தெய்வ விக்கிரகங்களே உள்ளன. புத்தரும் இந்துக் கடவுளும் அமைதியாக ஒற்றுமையாக உள்ள போது, அவற்றை வழிபடும் மக்களே சண்டை பிடிக்கின்றனர்.

அத்துடன், தமிழ்த் தலைவர்களான சம்பந்தன், மாவை சேனாதிராசா விக்னேஸ்வரன், சுமந்திரன் மற்றும் நீதிபதி இளஞ்செழியன் ஆகியோரின் பாதுகாப்புக்கு சிங்களப் பொலிஸாரே அமர்த்தப்பட்டுள்ளார்கள். அவர்களால் ஏன் தமிழ்ப் பொலிஸாரை பாதுகாப்புக்கு அமர்த்த முடியாது?’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.