முன்னாள் பிரதமர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் நளினியை, முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பை, 27ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
ராஜிவ் படுகொலை வழக்கில், நளினிக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. வேலுார், மகளிர் சிறையில், அவர் உள்ளார்.
1994ல், தமிழக அரசு கொண்டு வந்த திட்டத்தின்படி, முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி, அரசுக்கு, நளினி மனு அனுப்பினார், எந்த பதிலும் இல்லை.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், தாக்கல் செய்த மனுவில், ‘சிறையில், 2௦ ஆண்டுகள் கழித்தவர்களை விடுதலை செய்யலாம் என, தமிழக அரசு திட்டம் கொண்டு வந்தது.
நான், 2௦ ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளேன். என் மனுவை பரிசீலித்து, முன்கூட்டி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்’ என, கூறப்பட்டது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் முடிவைப் பொறுத்து, நளினியின் மனுவை பரிசீலிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, நளினி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு, நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஆர்.சுப்ரமணியன் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது.
நளினி தரப்பில், வழக்கறிஞர், எம்.ராதாகிருஷ்ணன், அரசியல் சட்டப்படி, தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தை செயல்படுத்தும் அம்சம் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இல்லை. ”எனவே, தமிழக அரசு பரிசீலிப்பதற்கு, எந்த தடையும் இல்லை. அரசு திட்டத்தின் கீழ், 2,200 பேருக்கு மேல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 26 ஆண்டுகள், நளினி, சிறையில் உள்ளார் என்றார்.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண், நளினியை விடுதலை செய்ய, மாநில அரசு முடிவெடுத்த போது, அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு வழக்கு தொடுத்தது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால், மனுதாரர் அனுப்பிய மனுவை பரிசீலிக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தில், வழக்கு நிலுவையில் உள்ளது என்றார்.
இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை, வரும், 27ம் தேதிக்கு, டிவிஷன் பெஞ்ச், தள்ளி வைத்துள்ளது.