“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல?” – கப்பலின் எரிபொருளை மாற்றும் கடல்சார் அமைப்பு

கடந்த 50, 60 ஆண்டுகளாக வளர்ச்சியை நோக்கி அசுர வேகத்தில் முன்னேறிய வளர்ந்த நாடுகளுக்கும் சரி, வளர்ச்சியைக் குறிக்கோளாக கொண்டு இயங்கும் வளரும் நாடுகளுக்கும் சரி, இந்த வளர்ச்சிப் பந்தயத்தில் துளியும் பங்கு கொள்ளாத ஏழ்மை நாடுகளுக்கும் சரி காலநிலை மாற்றம் என்பது மிக முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிப்பதும் மிகப்பெரிய பிரச்னையான இதனைக் கட்டுப்படுத்துவதற்கும்தான் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன. இது ஒருபுறம் என்றால் காலநிலை மாற்றத்துக்கான பொறுப்பாக வளர்ந்த நாடுகள் செயல்பட வேண்டும் என்ற வாதம் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது. சில வளர்ந்த நாடுகளைத் தவிர மற்ற வளர்ந்த வல்லரசு நாடுகள் இந்த வாதத்தை எதிர்க்கின்றன. அந்தப் பொறுப்பில் இருந்தும் நழுவிக் கொள்கின்றன. ஆனால், அவ்வப்போது காதில் விழும் சில அறிவிப்புகள்தான் காலநிலை மாற்றத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் தருகின்றன. கடந்த வாரம் அப்படியான அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. சர்வதேச கப்பல் துறையானது காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் என்று சர்வதேச ஒப்பந்தமிட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக லண்டனில் நடைபெற்றக் கூட்டத்தில் சர்வதேச கடல்சார் அமைப்பைச்(International Maritime Organization (IMO)) சார்ந்த 170 நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்று இந்த முடிவை எடுத்துள்ளனர். பூமியில் இருந்து பல்வேறு வகையில் வெளியிடப்படும் கார்பனின் கூட்டு வாயுக்களே காலநிலை மாற்றத்தின் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. 2050-ம் ஆண்டுக்குள் சர்வதேச கப்பல் துறையின் மூலம் வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவைக் குறைந்தது 50% ஆகக் குறைக்க திட்டமிட்டுள்ளனர் சர்வதேச கடல்சார் அமைப்பினர். அதுமட்டுமில்லாமல் 2030-க்குள் புதிதாக உருவாக்கப்படும் கப்பல்கள் அனைத்தும் மரபுசாரா எரிபொருள்களைப் பயன்படுத்தும் வண்ணம் கட்டமைக்கப்படும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறியுள்ளனர். சர்வதேச அளவில் இயங்கக்கூடிய ஒரு துறையிலிருந்து முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியானது மற்ற அனைத்துச் சர்வதேச துறைகளுக்கு முன்மாதிரியாய் அமையும் எனச் சொல்கின்றனர்.

Shipping கடல்சார் அமைப்பு

உண்மையில் ரயில், லாரி, இன்னும் பல கனரக வாகனப் போக்குவரத்தைவிட கப்பல் போக்குவரத்து சுற்றுச்சூழலுக்கு உகந்தது. ஏனென்றால் ரயில், லாரி போன்றவற்றைக் காட்டிலும் ஒரு கிலோமீட்டருக்கு குறைந்த அளவு கார்பனை வெளியேற்றுவது கப்பல்தான். ஆனால், தொழில் வளர்ச்சியும் கப்பல் துறையின் அதீத வளர்ச்சியும் கார்பன் வெளியீட்டை அசுர வேகத்தில் அதிகமாக்கிவிட்டன. அதுமட்டுமில்லாமல் கப்பல்களில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்படாத டீசல்கள் (Heavy Diesel) மூலம் வெளியாகும் அதிக அடர்த்தியுடைய பிளாக் கார்பன்கள்(Black Carbon). இவை வேகமான காலநிலை மாற்றத்தை உருவாக்கக் கூடியவை. இந்த வகையான டீசல்கள் பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளன. உலகம் மொத்தம் நடக்கும் வாணிபத்தில் 80% கப்பல்துறையின் மூலம்தான் நடைபெறுகிறது. இதிலிருந்தே அதன் அதீத வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும். சர்வதேச கப்பல் துறையின் மூலம் ஆண்டுக்கு 800 டன் கார்பன் வாயுக்கள் வெளியிடப்படுகின்றன. உலக அளவில் நடைபெறும் பசுமை இல்ல வாயு வெளியீட்டில் இது 2.5%. இந்தத் துறையினை ஒரு நாடாகக் கணக்கில் எடுத்தால் உலகிலேயே பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் ஆறாவது நாடாக இந்தத் துறை இருக்கும். இது ஜெர்மனிக்கு நிகரானது.

ஆனாலும் இப்போது எடுக்கப்பட்டிருக்கும் முடிவு மிகச்சரியான நேரத்தில் எடுத்த முடிவாகச் சொல்ல முடியாது. காரணம் காலநிலை மாற்றம் தொடர்பாக 1997-ல் நடைபெற்ற கியோட்டோ நெறிமுறையிலும் (Kyoto Protocol) 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்திலும் (Paris Summit) சர்வேதச கப்பல் துறை எளிதாக நழுவிவிட்டது. காரணம் வளர்ந்த நாடுகளின் ஆதரவு. பல சூழலியல் அழுத்தங்களால் இந்த முடிவுக்கு வந்துள்ளனர் சர்வதேச கடல்சார் அமைப்பினர். இந்த முடிவினால் எடுக்கப்படும் முயற்சிகளால் தங்கள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என பல்வேறு நாடுகளும் அச்சத்தில் இருக்கின்றன. சர்வேதச அளவில் இயங்கும் இந்தத் துறையினை நாடுகளால் கட்டுப்படுத்துவதும் கடினமான விஷயம்தான்.

கார்பன் வெளியேற்றம்

கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்த கப்பல் துறையினர் முன்னெடுக்கும் முயற்சியாக இருப்பது மரபுசாரா எரிபொருளைப் பயன்படுத்துவது. சூரிய ஒளி ஆற்றல், காற்றின் வழி மின்சாரம் பெறுதல், பேட்டரிகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய கப்பல்களுக்கு இவையெல்லாம் போதுமானதாக இருக்குமா என்பதும் கேள்விக்குறிதான். சர்ச்சைக்குரிய அணுமின் மூலமும் கப்பல்களை இயக்கலாம். பல்வேறு போர்க்கப்பல்களும் அணுமின்சாரத்தால் இயங்குவதை அறிவோம். மரபுசாரா எரிபொருள்களை மேம்படுத்த வேண்டிய நேரமும் தேவையும் வந்திருக்கிறது. அதற்கான ஆயத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

கார்பன் வெளியீட்டைக் குறைந்தது 50% குறைப்பதாகக் கூறியுள்ள சர்வதேச கடல்சார் அமைப்பு அதனை 100% வரை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. காலநிலை மாற்றத்தால் உயரும் கடல்நீரால் மூழ்கும் நிலையில் இருக்கும் தீவு நாடுகள் இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர். ஆனால் பிரேசில், சவுதி அரேபிய, அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த சர்வதேச ஒப்பந்தத்தை எதிர்க்கின்றன. அப்போதும் கூட 2008-ன் கார்பன் வெளியீட்டு அளவை வைத்தே இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்துக்கு துறைரீதியாக முயற்சிகள் எடுப்பதும் மிக முக்கியமான விஷயம். சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்தும் வான்வெளிப் போக்குவரத்தும்தான் கார்பன் வெளியீட்டை அதிகமாக ஏற்படுத்துகின்றன. சர்வதேச கப்பல் துறையின் இந்த மற்ற துறைகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்கள் தொடர்ந்து செயலாற்ற வேண்டும்.