கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முக்கிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் எந்த அதிகாரபூர்வ பேச்சுக்களையும் நடத்தாமலேயே நாடு திரும்பியுள்ளார்.
கொமன்வெல்த் உச்சி மாநாடு கடந்தவாரம் லண்டனில் நடைபெற்றது. இதில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்ட குழுவினர் லண்டன் சென்றிருந்தனர்.
கடந்த 15ஆம் நாள் லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற சிறிலங்கா அதிபர் ஒருவாரகாலம் அங்கு தங்கியிருந்து பல்வேறு மாநாடுகள், கருத்தரங்குகள், மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்றார்.
இந்தப் பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரித்தானியப் பிரதமர் தெரெசா மே உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்துவதற்கும் எதிர்பார்த்திருந்தார்.
எனினும், சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணத்தின் போது, எந்த வெளிநாட்டுத் தலைவரையும் சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கான அதிகாரபூர்வ வரவேற்பின் போது, பிரித்தானியப் பிரதமர் தெரேரா மே மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் சம்பிரதாயமாக கைகுலுக்கிக் கொண்ட போதும், எந்த தலைவர்களுடனும் பேச்சுக்களை நடத்தவில்லை.
கொமன்வெல்த் மாநாட்டில் சிறிலங்கா அதிபருக்கு அருகே தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசா அமர்ந்திருந்தார். அவருடனும் மைத்திரிபால சிறிசேன பேச்சுக்களை நடத்தவில்லை.
எனினும் கொமன்வெல்த் வர்த்தக மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் சிறிலங்கா நிதியமைச்சருமான மங்கள சமரவீர, கடந்தவாரம், தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசா மற்றும் ருவான்டா அதிபர் போல் கஹாமி உள்ளிட்டோருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.