நீண்ட விசாரணைக்குப் பின் பேராசிரியர் முருகன் கைது!

நிர்மலா தேவி விவகாரத்தில் பேராசிரியர் முருகனை, நீண்ட விசாரணைக்குப் பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்தனர்.

பேராசிரியர் முருகன்

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாக, அந்தக் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளியானதால் மதுரை காமராசர் பலகலைக் கழகம் முதல் சென்னை ஆளுநர் மாளிகை வரை சர்ச்சைக்குள்ளானது.

நிர்மலாதேவி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது. இதுவரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்  துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னையா, புத்தாக்கப் பயற்சி மைய இயக்குநர் கலைச்செல்வன், தொலை நிலைக்கல்வி இயக்குநர் விஜயராஜன், பேராசிரியர் முருகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆரம்பத்தில் விசாரணையில் ஆஜராகாமல் டிமிக்கிக் கொடுத்து வந்த பேராசிரியர் முருகனை சில நாள்கள் தேடலுக்குப்பின், நேற்று பல்கலைகழகத்துக்கு வேலைக்கு வந்தபோது பிடித்து விருதுநகருக்கு அழைத்துச் சென்றது சி.பி.சி.ஐ.டி. அவரிடம் கடந்த 2 நாள்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட முருகன், சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக, பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், சிபிசிஐடி போலீஸார் தரப்பில், முருகன் கைது செய்யப்பட்டது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.  நிர்மலாதேவி விவகாரத்தில் முதல் ஆளாக காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் கைதானதால், அது உயர் கல்வித்துறைக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் பெரும் பிரச்னையை உண்டாக்கும் என்று சிலர் அழுத்தம் கொடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.