நீ இருக்கிற அழகுக்கும் கலருக்கும் நயன்தாராவுக்குத் தங்கச்சியா வேடம் வேண்டுமா?’ : திருநங்கை ஜீவாவின் கதை.. (வீடியோ)

“ ‘தர்மதுரை’ படத்துக்குப் பிறகு சில சீரியல்களில் நடிச்சுட்டிருந்தேன். சினிமாவில் கொஞ்சம் இடைவெளி ஆரம்பித்ததும், நாம ஃபீல்டு அவுட் ஆகிடுவோமோனு பயம் வந்துடுச்சு.

வாய்ப்பு தேடி ஒவ்வொரு ஸ்டூடியோவுக்கும் போனேன். ஓர் இடத்துல ரொம்ப கோபத்தோடு, ‘ஏன் இப்படி உசுரை வாங்கறே. உனக்குன்னு ஒரு கேரக்டர் வந்தாதானம்மா கொடுக்க முடியும். சும்மா தூக்கிக் கொடுத்துட முடியுமா?’னு கேட்டாங்க.

Aval_nngai_Poster_16085  நீ இருக்கிற அழகுக்கும் கலருக்கும் நயன்தாராவுக்குத் தங்கச்சியா வேடம் வேண்டுமா?' : அவமானங்களைச் சுமந்த  திருநங்கை ஜீவாவின் கதையிது.. (வீடியோ) Aval nngai Poster 16085

‘ஏன் சார் திருநங்கை கேரக்டர் வந்தால்தான் கொடுப்பீங்களா? வேற ஏதாவது கேரக்டர் கொடுக்கமாட்டிங்களா?’னு கேட்டேன். ‘ஓஹோ… நீ இருக்கிற அழகுக்கும் கலருக்கும் நயன்தாராவுக்குத் தங்கச்சியா போடட்டுமா?’னு கிண்டலா சிரிச்சார்.

இப்படி பல அவமானங்களைச் சுமந்துட்டிருந்த நேரத்தில்தான், ஹரி பிரகாஷ் தம்பி கூப்பிட்டார்.

‘அவள் நங்கை’ குறும்படம் பற்றி சொன்னதும், சந்தோஷமா ஒத்துக்கிட்டு நடிச்சேன். இப்போ அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்” – அகத்திலிருந்து வந்துவிழும் வார்த்தைகளால் முகத்தின் பொலிவு கூடிப் புன்னகைக்கிறார், திருநங்கை ஜீவா சுப்பிரமணியம்.

கடந்த வாரம் வெளியான ‘அவள் நங்கை’ குறும்படம், சமூக வலைதளத்தில் வைராலாகி இருப்பது பற்றிக் கேட்டதுமே கூடுதலாக உற்சாகமாகிறார்.

Aval_Nangai_Team_16566  நீ இருக்கிற அழகுக்கும் கலருக்கும் நயன்தாராவுக்குத் தங்கச்சியா வேடம் வேண்டுமா?' : அவமானங்களைச் சுமந்த  திருநங்கை ஜீவாவின் கதையிது.. (வீடியோ) Aval Nangai Team 16566“ஆமாங்க, எனக்கு அது மிகப்பெரிய சர்ப்ரைஸ். ஆக்சுவலி அது என் லைஃப்ல நிஜமாகவே நடந்த சம்பவம்.

ஏவி.எம்ல ஒரு குறும்படம் ஸ்க்ரீன் பண்ணினாங்க. திருநங்கைகளைப் பற்றிய படமா இருந்ததால் நானும் கலந்துக்கிட்டேன்.

ஆனால், வேதனைதான் மிச்சமாச்சு. திருநங்கைகளின் வலியைக் காட்டறேங்கிற பெயரில் பாலியல் தொழிலாளியாகவும், பிச்சைக்காரிகளாகவும் காட்டியிருந்தாங்க.

இப்போ, எங்க சமூகத்தில் அந்த நிலை ரொம்பவே மாறியிருக்கு. எத்தனையோ பேர் கௌரவமாவும் கம்பீரமாகவும் வாழறோம்.

ஆனால், பார்வையாளர்களிடம் சென்ட்டிமென்ட்டைக் கொடுக்கிறதுக்காக நாங்க கஷ்டப்பட்டுட்டே இருக்கிற மாதிரி சொல்றதில் எனக்கு உடன்பாடில்லை. அங்கேயே கோபப்பட்டு, உடைஞ்சு அழுதேன்.

என் வலியைப் புரிஞ்சுக்கிட்ட ஹரி பிரகாஷ், இந்த வேதனையை அப்படியே குறும்படமா பதிவு பண்ணுவோம்னு சொன்னார்.

என் தோழிகளுக்கு எது சரின்னு வருமோ அதைத்தான் நான் படைப்பா கொடுக்க விரும்புவேன்.

இந்தக் கதை சரியா இருக்கும்னு தோணுச்சு. சந்தோஷமா நடிச்சேன். இவ்ளோ ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை” என உற்சாகத்துடன் தொடர்கிறார்.

“ஒவ்வொரு காட்சியையும் அனுபவப்பூர்வமா உணர்ந்து நடிச்சேன். ‘அக்கா நீங்க இப்படித்தான் நடிக்கணும்னு சொல்லப் போறதில்லை.

உங்களுக்கு என்ன தோணுதோ, எப்படி ஃபீல் பண்றீங்களோ அப்படியே நடிங்க’னு ஹரி தம்பி சுதந்திரமா விட்டுட்டார்.

இந்தக் குறும்படத்தைப் பார்த்துட்டு என் அம்மா, அப்பா எல்லாரும் என்னை உடனடியா வீட்டுக்குக் கிளம்பி வரச்சொல்லிட்டாங்க. ‘தர்மதுரை’ பாத்துட்டே வீட்டுல சமாதானமாகிட்டாங்க.

ஆனாலும், நான்தான் பிடிவாதமா போகலை. இப்போ, ‘நீ இங்கே வந்துதுடு. ஊருல யாரு என்ன வேணும்னாலும் பேசட்டும்.

நீ எப்படி இருந்தாலும் அம்மா ஏத்துக்குறேன்’னு என் அம்மா கண்ணீர் விடறாங்க. அந்த அளவுக்கு இந்தக் குறும்படம் அவங்களை ரொம்பவே பாதிச்சிருக்கு.

12 வருஷங்கள் கழிச்சு சொந்த ஊருக்குப் போகப்போறேன். 13 வயசுல ஊரைவிட்டு ஓடிவந்து 25 வயசுல போகப்போறத நினைச்சா ரொம்பவே எக்ஸைட்டடா இருக்கு. இதுக்கெல்லாம் ‘அவள் நங்கை’ டீம்க்குதான் நன்றி சொல்லணும்.

அம்மாவுக்கு அஞ்சு புடவை, அப்பாவுக்கு வேட்டி சட்டை, அண்ணன் பையனுக்கு புதுத் துணின்னு நிறைய வாங்கி வெச்சிருக்கேன்” என்கிறவர் குரலில் பாசத்தின் வாசம்.

jeeva_Subramaniyam_16280  நீ இருக்கிற அழகுக்கும் கலருக்கும் நயன்தாராவுக்குத் தங்கச்சியா வேடம் வேண்டுமா?' : அவமானங்களைச் சுமந்த  திருநங்கை ஜீவாவின் கதையிது.. (வீடியோ) jeeva Subramaniyam 16280

“நான் இந்தப் படத்தின் மூலமா என் தோழிகளுக்கும் சக திருநங்கைகளுக்கும் ஒரு தைரியத்தைக் கொடுத்திருக்கேன்.

ஒரு பையன், கொலைகாரனாவே நடிச்சாலும், ‘பாருடி அந்தப் பையன் என்னாமா நடிச்சிருக்கான்’னு பாராட்டுவாங்க. அதுவே நாங்க நடிச்சா, `உண்மையத்தானே சொல்றாங்க.

இவங்க மோசமானவங்கதானே’னு சொல்லிடுவாங்க. அதனால்தான் பொறுப்புணர்வோடு பார்த்துப் பார்த்து ரொம்ப கவனமா நடிக்கிறேன்.

‘அவள் நங்கை’ பார்த்துட்டு சீனு ராமசாமி சார், விஜய் சேதுபதி அண்ணா, மாதவன் சார், ஜி.வி.பிரகாஷ்னு எல்லாரும் பாராட்டினாங்க.

இந்தப் பாராட்டு நிச்சயமா என்னை இந்தச் சமூகத்தில் பொறுப்புள்ளவளா நடந்துக்க வைக்கும். அதற்கான நம்பிக்கையைக் கொடுக்கும்” என்கிறார் ஜீவா சுப்பிரமணியம்.

பேரன்பும் பூங்கொத்தும் ஜீவா!