இலங்கை கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் கிராமம்!

புத்தளம் பகுதியை அண்மித்த கிராமம் ஒன்று கடலுக்குள் முழுமையாக மூழ்கும் ஆபாயத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு காரணமாக இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆராச்சிகட்டுவ – கருக்குப்பனை கிராமம் நாளுக்கு நாள் கடலுக்குள் மூழ்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹெமில்டன் ஏரி மற்றும் கடலில் அருகில் உள்ள கருக்குப்பனை கிராமத்தில் வாழும் அனைவரும் மீனவ தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

கருக்குப்பனை கிராமத்தின் சில இடங்களில் கடல் அரிப்புக்குள்ளாக ஆரம்பித்துள்ளது. அதற்கு தீர்வாக கடலோர பாதுகாப்புத் திணைக்களம் பாரிய கருங்கற்களை கடற்கரையில் பயன்படுத்தியுள்ளனர்.

எனினும் கருங்கற்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களிலேயே கடல் அரிப்புகள் ஏற்படுகின்றமை பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

கருங்கற்கள் வைக்கபட்டுள்ள இடத்தில் பாதுகாப்பிற்காக ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் வெகு விரைவில் தமது கிராமம் கடல் நீருக்குள் மூழ்கும் என அந்தப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதுவரை சுமார் 10 – 15 அடி அளவு கடல் அரிப்புக்குள்ளாகியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.