இப்படியும் ஒரு பேரனா..? பாட்டியை கண்கலங்க வைத்த தென் ஆப்பிரிக்க மாணவர்!!

தென் ஆப்பிரிக்கா இளைஞர் ஒருவர், பட்டமளிப்பு விழாவில் தன் பாட்டியையும் மேடையேற்றி அழகு பார்த்த நெகிழ்ச்சியான தருணம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.தென் ஆப்பிரிக்காவில் KZN என்னும் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. அங்கு காண்ட்லா ( Nkandla) நாட்டில் மிகவும் பின் தங்கிய கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஜபுலோ, ஜுலு பாரம்பரிய உடையில் தன் 89 வயது பாட்டியுடன் பட்டம் வாங்க வந்திருந்தார்.சட்டத்துறையில் பட்டம் வாங்கும் ஜபுலோவின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், தன் பட்டமளிப்பு மேலங்கியை தன் பாட்டி மீது போர்த்தி அவரையும் மேடைக்கு அழைத்து வந்தார். அங்கு தன் பாட்டியுடன் சேர்ந்து சான்றிதழ்களைப் பெற்று கொண்டார்.

”எனக்குத் தாய் தந்தை இல்லை. என் சிறிய வயதிலேயே அவர்கள் இறந்துவிட்டனர். என்னை வளர்த்தது இவர்தான். என் கிராமம் கல்வியில் மிகவும் பின் தங்கியது என்பதால் அங்குப் பள்ளிக்கு செல்வதே பெரிய விஷயம். இன்று நான் இங்கு நிற்பதற்கு இவர் மட்டுமே காரணம்.இங்கு என்ன நடக்கிறது என்று கூட அவருக்குத் தெரியாது. படிப்புதான் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் என்பது மட்டும் அவருக்குத் தெரியும். இன்று நான் சட்டம் படித்து பட்டம் வாங்க இவர் மட்டும்தான் காரணம்” என்று தன் பாட்டியை அணைத்துக் கொண்டார். நெகிழ்ந்து போன மூதாட்டி கண் கலங்க தன் பேரனுக்கு முத்தமிட்டு வாழ்த்தினார்.