கண் நோய்கள் தப்புவது எப்படி???

கோடைகாலம் வந்துவிட்டாலே சூட்டினால் ஏற்படும் நோய்களை சமாளிப்பது சிரமமாகிவிடும். கண்களின் எரிச்சல், கட்டி, கண்சிவந்து போதல், கண்களில் நீர் வடிதல் போன்ற கோளறுகள் ஏற்பட்டு அதனால் அசௌகரியம் ஏற்படும். எனவே கோடையில் அதிக சிரத்தை எடுத்து பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்புகளில் கண் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அதிகம் வெயிலில் அலைவது, இடைவிடாமல் தொலைக்காட்சி, கம்யூட்டர் பார்ப்பது, சரியான உணவு முறையைப் பின்பற்றாமல் இருப்பது, கிருமித் தொற்று ஆகிய காரணங்களால் கண் நோய்கள் ஏற்படுகின்றன.
கண்ணில் வலி

கோடை காலத்தில் அதிகம்பேரை அவஸ்தைக்குள்ளாக்குவது ‘மெட்ராஸ் ஐ’ என்னும் கண்வலி. இதனால் கண் சிவந்துவிடும். ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் இந்த கண்நோய் ஏற்பட்டவர்கள், அடிக்கடி சுத்தமான நீரில் கண்களைக் கழுவி விடவும். கண்களுக்கு மருந்திட்டு சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை குளிப்பது மிகவும் நல்லது. கண் நோய் வந்தவர்களுக்கு கண்ணில் அழுத்தம் ஏற்பட்டு தலைவலி உண்டாகும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரிடம் காண்பிக்கவும்.

இந்த சமயத்தில் கண்களை கசக்குவது கூடாது என்று எச்சரிக்கின்றனர் கண் மருத்துவர்கள். இதனால் கண்களின் பாகங்களாகிய கருவிழி, வெண்ணிறமாகிய ஸ்கிலீரா, கண்ணில் உள்ள ஆடி, விழித்திரையில் பாதிப்பு ஆகியவை ஏற்படும்.

கண்வலி வந்தால் சரியான மருத்துவரை அணுகுவது அவசியம். வீட்டிலேயே வைத்தியம் பார்ப்பது பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கண்வலி வந்தால் சூரிய ஒளிக்கதிர்கள் கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதிகபட்ச ஒளியையும் பார்க்க வேண்டாம். கண்களுக்கு பொருத்தமான கண்ணாடியை போட்டுக் கொள்ளுங்கள் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கண்களில் கட்டி

கண் இமைகளில் அடிக்கடி தோன்றுவது கட்டிகள். இவை இமைப்பகுதியில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் அடைப்புகளின் காரணமாக உருவாகிறது.திரவங்கள் தேங்கி, கிருமிகள் தாக்கி இப்பகுதியில் சீழ் பிடிக்கிறது. இதற்கு சிலர் சுயமாக வைத்தியம் செய்ய முயற்சிப்பது வழக்கம். கண்களைப் பொறுத்தவரை எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் கட்டி ஏற்பட்டால் களிம்பு, சொட்டு மருந்து, மாத்திரைகள் பயன்படுத்துவதன் மூலம் கட்டிக்கு தீர்வு காணலாம். வலி இருப்பின் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். சுடு தண்ணீரில் கர்சீப் அல்லது பஞ்சை நனைத்து கையின் தோல் உள்ள பகுதியில், உள்ளங்கைக்கு பின் பகுதியில் வைத்துப் பார்க்க வேண்டும்.கை பொறுக்கும் சூட்டில் இந்த ஒத்தடத்தை காலை, மாலை இரண்டு வேளையும் 5 நிமிடத்துக்கு கண்களுக்கும் தரலாம்.

சர்க்கரை அளவு பரிசோதனை

கண்கட்டி அடிக்கடி ஏற்பட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சோதிக்க வேண்டியது அவசியம். நீரிழிவு அதிகமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும் இருப்பவர்களுக்கு கண் கட்டியாக துவங்கி முகத்திலும் பரவ வாய்ப்புள்ளது. இதன் அடுத்தகட்டமாக உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். கண்ணின் உள்புறத்தில் நாள்பட்ட கட்டி ஏற்படுதல் மற்றும் அடிக்கடி கட்டி வருதல் போன்ற பிரச்னைகள் இருப்பின் கட்டியை பயாப்சி சோதனை செய்து காரணத்தை கண்டறிய வேண்டும். சில சமயங்களில் அது புற்றுநோய்க் கட்டியாகவும் இருக்கவும் வாய்ப்புள்ளது.

கண் இமை துடிப்பது

கண் இமையில் தோன்றும் இன்னொரு பிரச்னை கண் இமை துடிப்பது ஆகும். வலது, இடது கண்ணில் ஏற்படும் துடிப்புக்கு ஏற்ப பலன் சொல்லும் ஆட்கள் இன்னும் உள்ளனர்.எப்போதாவது இமை துடித்தால் பயப்படத் தேவையில்லை. சிலருக்கு டென்ஷன் அதிகமாக இருக்கும் போது கண்ணில் துடிப்பு ஏற்படும். இன்னும் சிலருக்கு காரணம் இன்றி எப்போது பார்த்தாலும் இமை துடித்துக் கொண்டே இருக்கும்.மற்றவர்களைப் பார்த்து பேசவே சிரமப்படுவார்கள். இது போல் கண் இமை தொடர்ந்து துடிக்கும்போது மருத்துவ சிகிச்சை அவசியம்.

வயதானவர்கள் பிரச்சினை

வயதான பின்னர் கீழ் இமைகளில் உள்ள கொழுப்பு சத்து குறைந்து இமை உள்புறமாகவோ, வெளிப்புறமாகவோ திரும்பிவிட வாய்ப்புள்ளது. வெளிப்புறமாகத் திரும்பினால் கண்ணில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும். இதனால் கண் உறுத்துதல் மற்றும் பூளை கட்டுதல் பிரச்னை இருக்கும். இதற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

கண் இமை வீக்கம்

கண் இமைகளில் வீக்கம் ஏற்படும் போது கண்களை மூடுவதில் சிரமம் ஏற்படும். கண்கட்டி, பூச்சிக்கடி, எறும்புக்கடி, கண்நீர்ப்பைக் கட்டி போன்ற காரணங்கள் மற்றும் சளி, சைனஸ் போன்ற உடல் நோய்கள், சிறுநீரகம், இதய நோய்களாலும், உடலில் ஏற்படும் ஒவ்வாமையின் காரணமாகவும் கண் இமைகளில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. கண் வலி, கண்மை அலர்ஜி, கண் சொட்டுமருந்து அலர்ஜி ஆகியவற்றாலும் இமையில் வீக்கம் ஏற்படும்.

கிருமித் தொற்று

கண் இமை ஓரங்களில் அரிப்பு ஏற்படுதல், இமை முடிகள் கொட்டிப் போதல், தூங்கும்போது பூளை கட்டுதல், இமை ஓரங்கள் தடித்து வீங்குதல் போன்ற பிரச்னைகள் கிருமித் தொற்றால் ஏற்படும்.இமை முடிகளில் தலையில் உள்ள பொடுகு போல் ஒட்டிக் கொண்டு அரிப்பை ஏற்படுத்தும். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளை காலையில் குளிப்பதற்கு முன்பாகவும், இரவு தூங்குவதற்கு முன்பாகவும் இமைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி களிம்பு பயன்படுத்தி இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.