குடைபோல் வளையும் இறகுகள் வைத்து இரையைப் பிடிக்கும் அபூர்வப் பறவை!

அமைதியான நீர்நிலை. ஒரே ஒரு பறவை மட்டும் அமைதியாக நீண்ட கால்களோடு நீருக்குள் நின்றுகொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும்போதே இரைக்காகக் காத்துக்கொண்டிருப்பது புரிகிறது.

அதென்ன திடீரென்று சிறகுகளை விரித்து உடலை மறைத்துக்கொண்டு நீருக்குள் பார்க்கிறது. அது என்ன செய்கிறது என்பதைப் பார்க்க முடியவில்லையே. ஒருவேளை நீர் அருந்துகிறதோ. நீரை ஏன் இப்படி இறகுகள் கொண்டு முகத்தை மறைத்து மறைவாகக் குடிக்கவேண்டும்.

அடடா…
நீர் அருந்த வெக்கப்படும் ஒரு பறவையா! என்ன அதிசயம். மீண்டும் நகர்கிறது. அரவம் ஏதேனும் இருக்கிறதா என்று கூர்ந்து கவனிக்கிறது. சில அடிகள் எடுத்து வைத்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் சிறகுகளுக்குள் மறைகிறது.

ஆஹா… எவ்வளவு வெட்கம் வருகிறது இந்தப் பறவைக்கு. அது நீர் பருகுவதாக இருந்தால் ஏன் அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி என்னதான் செய்கிறது. அதைத் தெரிந்துகொள்வதற்கு முன் அது என்ன பறவை என்பதைப் பார்த்துவிடுவோமா!

அந்தப் பறவைதான் கருநாரை (Black Heron). அடிப்படையில் மிகவும் அமைதியான கருநாரை ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. உடல் முழுவதும் கருமை நிறத்தில் இருக்கும் அதற்கு கால் மட்டும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதுவே இனப்பெருக்கக் காலத்தில் இரு பாலினத்திலும் அடர் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும்.

இணைசேர்ந்தவுடன் ஆண் பறவை முதலில் குச்சிகள், மரக்கிளைகளைக் கொண்டு சுமார் 15 அடி உயரத்தில் நீர்நிலைக்கு அருகிலோ நீர்நிலையிலேயே உள்ள மரங்களிலோ கூடுகட்டத் தொடங்கும்.

ELLEN_JENNINGS_18217  குடைபோல் வளையும் இறகுகள் வைத்து இரையைப் பிடிக்கும் அபூர்வப் பறவை ELLEN JENNINGS 18217

மழைக்காலங்களில் இனப்பெருக்கம் செய்யும் இவ்வகைப் பறவைகளில் ஆண், பெண் பறவைகள் இரண்டுமே இணைந்து அவற்றின் முட்டைகளை அடைகாக்கும். 18 முதல் 30 நாள்கள் அடைகாக்கப்படும் முட்டைகள் ஒவ்வொன்றாகச் சிறிது இடைவெளியோடு பொறிந்து வெளிவரும் கருநாரைக் குஞ்சுகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் பிறப்பதால் அவை வெவ்வேறு அளவுகளில் இருக்கும்.

மிகவும் சிறிய பறவைகள் உயிர் பிழைத்து வருவது மிகவும் கடினம். பெரும்பாலும் இறந்தே விடுகின்றன. முழுமையாகப் பறக்கப் பழகும் வரை கூட்டிலேயே இருந்து பெற்றோர் இருவரும் பாதுகாக்கின்றனர்.

கூட்டமாகவே வாழக்கூடிய இந்தப் பறவை இனம் கூடுகட்டுவது கூட ஒரே பகுதியில் கூட்டமாகத்தான் கட்டும்.

அதன் பெருமளவு நேரத்தை நீர்நிலைகளில் அலைந்து திரிவதில் கழிக்கும் இது தன் நீண்ட கால்களை வளைத்து பாதத்தில் இருக்கும் நகங்களால் உடலில் ஒட்டும் பூச்சிகளைச் சுத்தம் செய்துகொள்கிறது. சிறகுகளைப் பயன்படுத்தி தலையில் நீண்டிருக்கும் கொண்டையைச் சீவிச் சிங்காரித்து அழகுபடுத்திக் கொள்ளுமாம்.

don.vanpoppel_18059  குடைபோல் வளையும் இறகுகள் வைத்து இரையைப் பிடிக்கும் அபூர்வப் பறவை don

ஆப்பிரிக்கா கண்டத்தில் தெற்கு சகாரா, நியூ கினியா, ஐவரி கடலோரப் பகுதி, நைஜீரியா, கென்யா, தான்சானியா, சாம்பியா, ஜிம்பாப்வே மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகிறது.

தற்போது அதிகமாகவே இருக்கும் இந்தப் பறவையினம் அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் இல்லையென்றாலும் அது குறைந்துவருவது அந்த நிலைக்கு இட்டுச்செல்ல வாய்ப்புகள் அதிகம் என்ற நிலையில்தான் இருக்கிறது. மனித ஆக்கிரமிப்புகள் அதிகமாகி வருவது மற்றும் அவர்களது வாழ்விடங்களில் மனிதத் தலையீடுகள் அதன் இனப்பெருக்கத்தைப் பாதிக்கின்றன.

1950 களில் மடகாஸ்கர் தீவின் அண்டானானரிவோ என்ற ஒரு பகுதியில் மட்டுமே பத்தாயிரத்திற்கும் அதிகமான ஜோடிகள் இருந்தன. தற்போது 50 ஜோடிகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன.

இது வரும் காலத்தில் அவை அழிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதைச் சுட்டுகிறது. இந்தப் பறவைகளின் இனப்பெருக்க எண்ணிக்கை கூட பெருமளவில் குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

0GLPB2TPJw_18177  குடைபோல் வளையும் இறகுகள் வைத்து இரையைப் பிடிக்கும் அபூர்வப் பறவை 0GLPB2TPJw 18177

ஒரு குறிப்பிட்ட கண்டத்தில் மட்டுமே வாழக்கூடிய இந்த அறிய வகைப் பறவைக்கு மற்றுமொரு தனித்தன்மையும் உண்டு. அதுதான் அதன் வேட்டையாடும் யுக்தி.

நாம் மேலே பார்த்த அதன் செயல் யாராவது பார்த்துவிடுவார்களோ வெட்கப்பட்டுக்கொண்டு இறகுகளை மறைத்து நீர் அருந்த அல்ல. சூரிய ஒளியில் அதிகம் மீன்கள் நீரின் மேற்பகுதிக்கு வராது.

அதனால் அது தன் இறகுகளைக் குடைபோல் வளைத்து நீரின் மேல் வைத்துக் காத்திருக்கும். இருட்டாக இருக்கிறது என்று அந்தப் பகுதிக்கு வரும் மீன்களை நிலத்தில் இருக்கும் கால்களை அசைப்பதன் மூலம் கீழே செல்லவிடாமல் பயமுறுத்தி இன்னும் மேலே வரவைத்துத் தனது நீண்ட அலகால் கொத்திப் பிடித்துக்கொள்ளும்.

பிடித்த மீனை கொத்திச் சாப்பிடாமல் அப்படியே வாயில் போட்டு விழுங்கிவிடும். அதன் மீன்பிடிக்கும் தனித்தன்மை வாய்ந்த யுக்திக்காகவே பறவையியல் ஆய்வாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனது. இதுபோல் உங்களைக் கவர்ந்த பறவைகளைப் பற்றிக் கீழே பட்டியலிடலாமே…!