மாபெரும் அதிகாரமும், செல்வாக்கும் கொண்ட ஒரு நபருக்கு எதிராக நீதி கோரும் ஒருவரின் தரப்பு உண்மையானதாக இருந்தால், சத்தியத்திற்கான அந்த போராட்டத்தில் ஈடுபடும் உங்களின் பணி வழக்கத்தைவிட கடினமானதாக இருக்கும்.”
இந்த சத்திய வாக்கை சொல்வது சர்ச்சை சாமியார் ஆசாராமுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அதிகாரி சஞ்சல் ஷர்மா.
இந்தத் தீர்ப்பின் பின்னணியில் பணியாற்றியவர்களின் மிக முக்கியமான பங்காற்றியவர் சஞ்சல் மிஷ்ரா.
தன்னுடைய பணியை சிறப்பான முறையில் செய்த நிறைவில் இருக்கிறார் இந்த `பெண் சிங்கம்’. அவருடன் பிபிசி நிருபர் பேசினார்.
ராஜஸ்தான் காவல்துறையில் 2010 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த சஞ்சல் மிஷ்ராவுக்கு இந்த வழக்கு விசாரணை, ஆரம்பகட்டத்தில் இருந்தே எளிதானதாக இல்லை.
ஆசாராமை எப்படி விசாரணை செய்தார்?
இந்த வழக்கில் ஆசாராம் கைது செய்யப்பட்டதுமே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வது காவல்துறை அதிகாரிகளுக்கு பல சிக்கல்கள் கொடுத்தது.
முதல் காரணம் ஆசாராம் கைது செய்யப்பட்டது இந்தூரில். அவர் மீதான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதோ டெல்லியில்.
ஆசாராமால் பாதிக்கப்பட்டவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். பாலியல் துஷ்பிரயோகம் நிகழ்த்தப்பட்டபோது, பாதிக்கப்பட்டவர் மற்றொரு மாநிலத்தில் படித்துக்கொண்டிருந்தார்.
நடைமுறை சிக்கல்கள், காவல் நிலைய எல்லை வரம்புகள் என்பவை ஒரு நகரத்திற்குள்ளேயே பல்வேறு நெருக்கடியை கொடுக்கும் என்பதும், வழக்கோ சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவருக்கு எதிரானது என்ற நிலையில் விசாரணை குழுவினர் எதிர்கொண்ட சிக்கல்களை பட்டியலிடுவதும் சிரமமே.
அத்தகைய ஒரு நிலையில் வழக்கு விசாரணையில் வெவ்வேறு மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து அவர்களின் ஒத்துழைப்புடன் விசாரணையை மேற்கொள்ள நேர்ந்தது. இந்த நடைமுறைகளுக்கு கால அவகாசமும் அலைச்சலும் அதிகமானது.
இந்த வழக்கு விசாரணைபற்றி பிரதான விசாரணை அதிகாரி தலைவர் சஞ்சல் மிஷ்ரா இவ்வாறு கூறுகிறார், “பல மாநிலங்கள் தொடர்புடைய விவகாரம் என்பது விசாரணைக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியது.
விசாரணையின் வட்டம் பெரிதாக இருந்தது. வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்துவதும், சான்றுகளையும், ஆதாரங்களையும் சேகரிப்பதும் சாட்சிகளை கண்டறிவதும் மாபெரும் பிரச்சனையாக இருந்தது”.
“இரண்டாவதாக, குறித்த காலத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டியிருந்தது. மூன்றாவது விஷயம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டபின், கைது செய்யப்படும்போது சூழ்நிலை எவ்வாறு மாறும் என்ற பதற்றமும் இருந்தது.
ஏனென்றால் கைது செய்யப்பட வேண்டியது ஒரு சாமியார், கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படுபவர் என்பது எங்கள் முன் இருந்த மிகப்பெரிய சவால்” என்கிறார் சஞ்சல் மிஷ்ரா.
“வலுவான ஆதாரங்களும், சாட்சிகளும் கிடைக்கும் வரை ஆசாராமை கைது செய்ய நாங்கள் விரும்பவில்லை.
போதுமான முன்னேற்பாடுகளுக்கு பிறகே அவரை கைது செய்தோம். அதன்பிறகு, அவரை தினசரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது, ஜாமீன் மனுமீது வாதம் செய்வது என தொடர்ந்து கடுமையாக பாடுபட வேண்டியிருந்தது, இவை அனைத்தும் ஒரே நேரத்தில் செய்யவேண்டும், ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும், நடவடிக்கைகள் அனைத்தும் வீணாகிவிடும் என்பதோடு, பாதிக்கப்பட்டவருக்கு நீதியும் கிடைக்காது.
பணிச்சுமை ஒருபுறம் என்றால், தனிப்பட்ட வாழ்க்கையுடன் அதை சமன் செய்யவேண்டும் என்பதும் நான் எதிர்கொண்ட சவால்.”
இந்த விஷயத்தில் அரசியல் சதித்திட்டம் எதாவது இருக்கிறதா என்ற கோணத்திலும் ஆராயத் தவறவில்லை.
ஆனால் எங்கள் விசாரணையில் அதற்கான சாத்தியங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டோம்.
ஆசாராம் கைது செய்யப்பட்டது எப்படி?
விசாரணை அதிகாரி சஞ்சல் மிஷ்ரா, தனது விசாரணை குழுவின் பிற நான்கு உறுப்பினர்களுடன் இந்தூர் ஆசிரமத்தை சென்றடைந்தபோது, ஆசாராம் தனது பிரசங்கத்தை தொடங்கியிருந்தார்.
பிரசங்கம் முடிந்தபிறகு அவர் ஓய்வெடுக்க சென்றுவிட்டார். இதற்கிடையில், சஞ்சல் மிஷ்ராவும், அவரது குழுவினரும் இந்தூர் போலிசாருடன் இணைந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கினார்கள்.
ஆசாராம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அறையின் கதவுகள் திறக்கப்படவில்லை. அப்போது ‘ஆசாராம் ஜி, கதவை திறக்காவிட்டால், நாங்கள் உடைத்துக் கொண்டு உள்ளே வரவேண்டியிருக்கும்’ என்று சஞ்சல் மிஷ்ரா எச்சரிக்கை விடுத்தார்.
“எங்களிடம் சட்டப்படியான கைது உத்தரவு இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கதவை திறக்க மறுத்தால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்லும் அதிகாரம் எங்களுக்கு இருக்கிறது” என்று ஆசாராமிடம் நான் உரக்கச் சொன்னேன்.
“இந்தூர் ஆசிரமத்தின் வெளியில் மிகப்பெரிய கூட்டம் கூடிவிட்டது. கூட்டம் கூடுவதற்கு முன் ஆசாராமை கைது செய்து விரைவில் அழைத்துச் செல்லவேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டிருந்தோம்.
எங்களிடம் இருந்த இரண்டு மணி நேரத்திற்குள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியிருந்தது. எட்டரை அல்லது ஒன்பது மணியளவில் நாங்கள் ஆசிரமத்திற்குள் சென்றோம். ஆனால், இரவு ஒன்றரை-இரண்டு மணிக்கு இடையில்தான் ஆசாராமை கைது செய்ய முடிந்தது.”
இரவு முழுவதும் இந்தூர் விமான நிலையத்தில்
ஆகஸ்ட் 31ஆம் தேதி, ஆசிரமத்தில் இருந்து கைது செய்யப்பட்ட பின்னர், அங்கிருந்து நேரடியாக அவர் இந்தூர் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஜோத்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த வேண்டும்.
சாலை மார்க்கமாக இந்தூரில் இருந்து ஜோத்பூருக்கு செல்வதற்கு ஆறரை மணி நேரம் ஆகும் என்பதால் விமானம் மூலம் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் விமானத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
“ஆசாராமை அழைத்துக் கொண்டு காலை 10.15 மணியளவில் ஜோத்பூரை அடைந்தோம்,” என்கிறார் சஞ்சல் மிஷ்ரா.
‘குண்டு வைத்து தகர்க்க சதி’
சஞ்சல் மிஷ்ராவை கொலை செய்வதற்கான சதித்திட்டங்களும் தீட்டப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட ஒரு செய்தியின்படி, “கார்திக் ஹல்தர் குஜராத் காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில், விசாரணை அதிகாரி சஞ்சல் மிஷ்ரா மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்காக மும்பைக்கு சாலை மார்க்கமாக டைனமைட் கொண்டு சென்றதையும் கார்திக் ஹல்தர் ஒப்புக் கொண்டார்.”
ஆனால் இதுபற்றி சஞ்சல் மிஷ்ராவிடம் பி.பி.சி. பேசியபோது, எதிர்மறை விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு தனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறிவிட்டார்.
எதிர்மறையான விஷயங்களை முன்நிறுத்தினால், இதுபோன்ற விவகாரங்களில் உதவி செய்ய மக்கள் முன்வருவதற்கு பதிலாக அச்சம் அடைவார்கள் என்று அவர் கருதுகிறார்.
அவர் மேலும் கூறுகிறார், “எதிர்மறை கருத்துகளை முன்வைப்பதற்கு பதிலாக ஆக்கப்பூர்வமான விஷங்களையே முன்வைக்க விரும்புகிறேன்.
அதுதான் நீதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என உத்வேகம் கொடுக்கும். குஜராத் காவல்துறையிடம் இருந்து ராஜஸ்தான் மாநில காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதுதொடர்பான முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.”
2013ஆம் ஆண்டு தொடரப்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனையும், ஷில்பி மற்றும் சரத் சந்திரா ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷ் மற்றும் சிவா மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது ராஜஸ்தான் மாநில ஜோத்பூர் நீதிமன்றம்.