ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ. அதிவேகமாகப் பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களைத் திணறடிப்பதில் பிரட் லீக்கு நிகர் பிரட் லீதான். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகைப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் இவர் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் கலந்துகொண்டு விளையாடியுள்ளார். கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பிறகு, தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் வர்ணனையாளராக உள்ளார். இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் பிரட் லீ, முகம் நிறையத் தாடியுடன், வயதான தோற்றத்தில் சிறுவர்களுடன் விளையாட வந்தார்.
முதலில் வந்திருப்பது பிரட் லீ எனத் தெரியாமல், சிறுவர்கள் அவருக்கு பேட்டிங் கற்றுக்கொடுத்தனர். பிரட் லீயும் முதலில் தனக்கு ஆடத் தெரியாததுபோல் ஆடி ஆட்டமிழந்தார். பின்னர், சிறிது நேரம் பவுண்டரிகளாக விளாசிய அவர், பந்தைக் கையில் எடுத்தார். முதலில் பந்துவீசவே தெரியாதவர்போல் பந்துவீசிய அவர், பின்னர், தனது ஸ்டைலில் பந்துவீசினார். அவரது ஆட்டத்தைக் கண்டு பிரமித்த சிறுவர்கள், இறுதியில் இந்த வயதில் எப்படி, இவ்வளவு வேகமாகச் செயல்படுகிறீர்கள் எனக் கேட்க, சிறுவர்கள் முன்னிலையில் தனது வேஷத்தைக் கலைக்கிறார். பிரட் லீயைப் பார்த்த மகிழ்ச்சியில் சிறுவர்கள் குதித்தனர். பின்னர், சிறுவர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கி விடைபெறுகிறார் பிரட் லீ.