ஆண் நண்பரிடம் இருந்த தவறான உறவை கண்டித்த தந்தைக்கு உணவில் விஷம் வைத்துக் கொலை செய்த மகளை ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ளது சிக்கல் கிராமம். இங்குள்ள மேற்கு காலணி பகுதியில் வசித்து வந்தவர் கருப்பையா (53). மனைவியை இழந்த இவர் அதே பகுதியில் வசித்து வரும் தன் மகள் முருகவள்ளியின் வீட்டில் உணவு சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் கருப்பையா கடந்த சனிக்கிழமை இரவு முருகவள்ளியின் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டார். உணவு அருந்திய சிறிது நேரத்தில் கருப்பையாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருப்பையா மறுநாள் காலை உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில் முருகவள்ளிக்கும் அதே ஊரில் வசித்து வரும் வேறு ஒரு நபருக்கும் இடையே தவறான உறவு இருந்து வந்துள்ளது.
முருகவள்ளியின் கணவர் சண்முகவேல் வேலைக்குச் சென்றபின் முருகவள்ளியின் வீட்டுக்கு அந்த நபர் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இது கருப்பையாவுக்குத் தெரிந்ததால் மகளைக் கண்டித்துள்ளார். ”தன்னைப் பற்றித் தன் கணவரிடம் கூறிவிடுவாரோ” என்ற அச்சத்தில் தந்தை கருப்பையாவை தன் ஆண் நண்பர் துணையுடன் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர் வாங்கி வந்த விஷத்தைச் சாப்பாட்டில் கலந்து தன் தந்தைக்குக் கொடுத்துள்ளார். இதனால் கருப்பையா உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக சிக்கல் கிராம நிர்வாக அலுவலர் ராஜன் கொடுத்த புகாரினை தொடர்ந்து, தந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த மகள் முருகவள்ளியைக் கைது செய்துள்ளனர். உயிரிழந்த கருப்பையாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் முருகவள்ளி வீட்டில் இருந்த விஷம் கலந்த உணவினையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கருப்பையாவின் கொலைக்கு உடந்தையாக இருந்த முருகவள்ளியின் கள்ளக்காதலனையும் கைது செய்யுமாறு கருப்பையாவின் உறவினர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். தவறான உறவை கண்டித்த தந்தையையே பெற்ற மகள், உணவில் விஷம் வைத்து கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.