வெளிநாட்டில் தலைமறைாவகியுள்ள குற்றவாளிகளான ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் இருவரை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேசத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி இருவரை கொலை செய்து பலரை காயமடைய செய்த வழக்கின் தண்டனை குற்றவாளிகளான இருவரும் வெளிநாடொன்றில் தலைமறைவாகியுள்ளனர்.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதுடன், அக் கடிதத்தின் பிரதி யாழ். மேல் நீதிமன்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில்,
நாடு கடத்தல் உடன்படிக்கையை உடனடியாக நடமுறைப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு யாழ்.மேல் நீதிமன்றானது பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டியும், ஏற்கனவே சட்டமா அதிபருக்கு 30.11.2017 அனுப்பிய கடிதத்தை மீளவும் நினைவுபடுத்தி விரைவாக நாடுகடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், இந் நாடுகடத்தல் நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பாக யாழ்.மேல் நிதிமன்றுக்கு அறிக்கை அனுப்பப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.