தினகரன்-திவாகரன் மோதலின் விளைவாக, மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறார் சசிகலா. சிறையில் அவரைச் சந்தித்து விளக்கம் கொடுக்கத் தயாராகி வருகின்றனர் தினகரனும் திவாகரனும்.
‘பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கு முன்னோட்டமாகத்தான் திவாகரனைத் தூண்டிவிட்டுள்ளது ஆளும் சர்க்கார்’ எனக் கொதிக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன்.
அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
தினகரன்-திவாகரன் மோதலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
”நாங்கள் எடுத்த நிலைப்பாடு என்ன என்பது உலகத்துக்கே தெரியும். பொதுச் செயலாளர் சின்னம்மாவுக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது, ‘அம்மா ஆட்சி தொடர வேண்டும்.
இந்தக் கட்சி நன்றாக இருக்க வேண்டும்’ என முடிவெடுத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினோம். சின்னம்மா கூறியதால்தான் அவருக்கு ஓட்டுப் போட்டோம். ஓ.பி.எஸ் எங்களிடமிருந்து பிரிந்து போனார். இந்தக் கட்சியை உடைத்தார். தர்மயுத்தம் என்றார்.
ஊழல் ஆட்சி என்றார். எடப்பாடி சிரித்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்றார். நிர்வாகம் சரியில்லை; ஊழல் நடக்கிறது என்றார். மோடி சொன்னதால் இணைந்தோம் என்றார்.
அதன் பயனாக ஊழல் ஆட்சியும் போய்விட்டது. தர்மயுத்தமும் போய்விட்டது. துணை முதல்வர், வீட்டுவசதி வாரிய அமைச்சர் பதவிகளைப் பெற்று, அவர் செட்டிலாகிவிட்டார்.
இதன்பிறகு, சின்னம்மா படத்தைக் கட்சி ஆபீஸிலிருந்து அகற்றினார் எடப்பாடி பழனிசாமி. இதையெல்லாம் பார்க்கும்போது பி.ஜே.பிக்கு பயந்து இவர்கள் அடிபணிந்து போகின்றனர் என்பதை அறிந்தோம்.
இவர்கள் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கை பாயும் என்பதுதான் அச்சத்துக்கு அடிப்படைக் காரணம். அந்த பயத்தில்தான் இந்த ஆட்சி நகர்ந்துகொண்டிருக்கிறது.
நாங்கள், பொதுச் செயலாளர் சின்னம்மா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி நன்றாக நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், கட்சியைக் கூட ஆரம்பிக்கக் கூடாது என அவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள்.
சின்னத்தை ஒதுக்கக் கூடாது என அதற்கும் ஒரு வழக்கு போட்டார்கள். மனுஷன் வாழவே கூடாது என்ற எண்ணத்தில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டார்கள்.
அந்தளவுக்கு எங்களைப் புறம்தள்ளினார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் நாங்கள் ஆர்.கே.நகரில் வென்றோம். இப்போது நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடுகிறார்கள்.
அடிப்படைத் தொண்டர்களும் பொதுவான மக்களும் எங்கள் பக்கம் இருக்கின்றனர். எங்களுடைய செல்வாக்கு என்ன என்பதை அடுத்துவரும் காலகட்டங்களில் நிரூபிப்போம்.
அதுவரையில் எங்களுக்குப் பொதுச் செயலாளர் சின்னம்மாதான். துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்தான். எம்.பி-க்களும் எம்.எல்.ஏ-க்களும் தொண்டர்களும் இந்த அணியில்தான் இருக்கிறார்கள்.
இதைக் குழப்ப நினைத்த ஆளும் சர்க்கார், உளவுத்துறை மூலமாகச் சில வேலைகளைச் செய்து வருகிறது. அவரைப் பேட்டி கொடுக்க வைக்கின்றனர்.
இந்தப் பேட்டியால் எந்தச் சலசலப்பும் ஏற்படப் போவதில்லை. சின்னம்மாவை எத்தனையோ பழி சொன்னார்கள். அதையும் மீறித்தான் நாங்கள் வென்றோம்.
சின்னம்மா நல்லவர் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். திவாகரன் பேட்டியைப் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது. இன்று மதியம் வரவிருக்கும் பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கின் முன்னோட்டமாக இருக்குமா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
இதுவரைக்கும் எங்கள் கருத்துகளைக் கேட்டுவந்த எந்தத் தொலைக்காட்சிகளும் இதுவரையில் எங்களை அழைக்கவில்லை. அரசின் அச்சுறுத்தலுக்கு பயந்து, எங்களைத் தொலைக்காட்சிகள் அழைக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.
இன்றைக்குத் திவாகரனைக் கையில் எடுத்துப் பேட்டி கொடுக்க வைக்கிறார்கள். எங்கள் பாதையில் பொறுமையாகச் சென்று கொண்டிருக்கிறோம். குழப்பங்கள் தேவையில்லை. தெளிவான சிந்தனையில் நாங்கள் இருக்கிறோம்”.
தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களில் பாதிப்பேர் திவாகரன் பக்கம் இருப்பதாகத் தகவல் வெளியானதே?
”அவர் பக்கம் எந்த எம்.எல்.ஏ-க்களும் இல்லை. அது நூற்றுக்கு நூறு உண்மை. அது அவர்கள் குடும்பப் பிரச்னை. மச்சான்-மாமன் பிரச்னை. பரோலில் சின்னம்மா வந்தபோது, எம்.பி, எம்.எல்.ஏ-க்களைத் தனித்தனியாக அழைத்துப் பேசினார்.
அப்போதுகூட, ‘துணைப் பொதுச் செயலாளர் வரம்பு மீறிச் செயல்படுகிறார்’ என அவர் எந்த இடத்திலும் பேசவில்லை. ‘என் சொல்படிதான் நடக்கிறார்.
அவர் சொல்வதைக் கேட்டுச் செயல்படுங்கள்’ எனக் கூறிவிட்டுத்தான் சென்றார். தன்னிச்சையாக அவர் முடிவெடுக்கிறார் என திவாகரன் கூறியது உண்மையாக இருந்தால், எங்களைச் சந்திக்கும்போது, அப்படி எந்தக் கருத்தையும் சின்னம்மா கூறவில்லை. ‘துணைப் பொதுச் செயலாளர் நன்றாகச் செயல்படுகிறார்’ என்றுதான் கூறினார்”.
வெற்றிவேல் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவை எப்படிப் பார்க்கிறீர்கள்?
”அது அவருடைய சொந்தக் கருத்து. ‘நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்தநேரத்தில் இப்படியொரு குழப்பம் தேவையில்லை’ என்ற அடிப்படையில்தான் அந்தக் கருத்தை வெளியிட்டார். மோதலைத் தொடங்கிவைத்தது திவாகரன் தரப்பினர்தான். அதற்கு வெற்றிவேல் பதில் கொடுத்தார். அவ்வளவுதான்”.
மோதலின் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும்?
‘ஒன்றுமே நடக்காது. இரண்டு நாள்களுக்கு ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்தும். அதன்பிறகு இந்த விவகாரம் காணாமல் போய்விடும்”.