சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைதீவில் தங்கியிருந்து தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், முழங்காவில்- இரணைமாதா நகரில் தாம் தங்கியுள்ள பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
எனினும் சிறிலங்கா கடற்படையினரின் சாதகமான பதில் எதுவும் கிடைக்காத நிலையில், கடந்த 23ஆம் நாள், படகுகளில் இரணைதீவுக்குச் சென்று அங்குள்ள தேவாலயத்தில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும், தொடர்ந்தும் இன்று ஐந்தாவது நாளாக அந்த தேவாலயத்தில் தங்கியிருந்து தமது காணிகளை விடுவிக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் சிலர் சென்று பார்வையிட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் தேவைக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் எடுத்துச் சென்று வழங்கியுள்ளனர்.