கனடா, அவுஸ்திரேலியாவில் இருந்து விடுமுறைக்காக இலங்கை வந்து, பம்பலபிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் தங்கிருந்த இருவரை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம், தங்க சங்கிலி மற்றும் பெறுமதி வாய்ந்த கமரா உள்ளிட்ட உபகரணங்களை கொள்ளையிட்ட யுவதி ஒருவர் உள்ளிட்ட நால்வரை பம்பலபிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது முறைப்பாட்டாளர்கள் பொலிஸாருக்கு கூறியதாவது, கோட்டை பகுதியில் இடம்பெற்ற இசைக் கச்சேரியொன்றினை பார்வையிட சென்றுள்ளதாகவும், அப்போது அவர்களுக்கு 24 வயதான யுவதியொருவர் அறிமுகமாகினார் எனவும் இந் நிலையில் அந்த யுவதியுடன் தொலைபேசி எண்களை பறிமாறிக்கொண்டு மேற்படி இருவரும், தமது தோழியாக அறிமுகமாக குறித்த யுவதிக்கு, இரவு உணவு விருந்தொன்றுக்காக தமது தொடர்மாடி குடியிருப்புக்கு வரவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
விருந்திற்கு சென்ற குறித்த யுவதி மேலும் இருவருடன் சென்றுள்ளார். அவ்விருவரும் தம்மை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என அறிமுகம் செய்துகொண்டதுடன் பின்னர் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி பணம் சொத்துக்களை கொள்ளையிட்டுவிட்டு அந்த யுவதியுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
2 இலட்சத்து 20 ஆயிரத்து 540 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியொன்று, பெறுந்தொகை பணம், கமரா, கைக்கடிகாரம் மற்றும் கையடக்கத் தொலைபேசி, உள்ளிட்டவை இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.
கொள்ளையிடப்பட்ட பணம், பொருட்களின் பெறுமதி ஐந்தரை இலட்சத்துக்கும் அதிகமானது என பொலிஸார் தெரிவித்ததுடன் அதன்படி குறித்த யுவதியை பொரளை – சஹஸ்புர பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்து அவருடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் அவரது கணவன் எனக் கூறப்பட்ட நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த யுவதி பாதையோர விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவர் எனவும் அவர்களுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்ட கடுவலை, நாரஹேன்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த மேலும் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கொள்ளைக்கு சென்ற முச்சக்கர வண்டி, பயன்படுத்திய கத்தியையும் மீட்டனர்.
கைதானவர்கள் கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்ச் செய்யப்பட்டதுடன் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.