ஓலா வாகனத்தில் பயணித்த இளம்பெண்ணிடம் ஓட்டுநரின் உறவினர் அத்துமீறிய சம்பவம், உ.பியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம், நொய்டாவில் உள்ள கால் சென்டரில் பணிபுரியும் 27 வயது இளம்பெண் ஒருவர், வீடு திரும்புவதற்காக ஓலா வாகனத்தை புக் செய்தார். அவரை ஏற்றிச் செல்ல வந்த வாகனத்தில் வேறொருவரும் இருந்திருக்கிறார். அவரைப் பற்றி டிரைவர் அசோக்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குப் பதில் அளித்த டிரைவர், ‘மன்னித்துவிடுங்கள். இவர் எனது உறவினர். போகும் வழியில்தான் அவர் இறங்கும் இடமும் உள்ளது. அதனால், இவரையும் நம்முடன் பயணிக்க அனுமதியுங்கள்’ எனக் கூறியிருக்கிறார்.
டிரைவரின் வேண்டுகோளை அப்பெண்ணும் ஏற்றுக்கொண்டார். சற்று நேரத்தில் வேகமெடுத்த கார், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நின்றுள்ளது. அப்போது கார் ஓட்டுநர் அசோக், ‘நீங்கள் இருவரும் காரை விட்டு இறங்குங்கள்’ எனக் கூறியிருக்கிறார். எதற்காக இறங்க வேண்டும் என அப்பெண் சத்தம் போட்டதற்கு, ஓட்டுநர் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ஓட்டுநரின் உறவினர் அப்பெண்ணைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியிருக்கிறார். இதுகுறித்து காவல்துறையில் அந்தப் பெண் புகார் அளித்திருக்கிறார். இந்தச் சம்பவத்தை விசாரித்து வரும் போலீஸார், ‘மருத்துவப் பரிசோதனைக்காக அப்பெண்ணை அனுப்பி வைத்துள்ளோம். குற்றம் சுமத்தப்பட்ட ஓட்டுநரும் அவரது உறவினரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடி வருகிறோம்’ என்கின்றனர்.