கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் காவல்துறையினருக்கு ஒரு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. லினஸ் பிலிப் ( Linus Phillip) என்ற நபரின் மொபைலை அன்லாக் செய்ய வேண்டும். அதற்கென்ன அவரைக் காவல் நிலையம் வரவழைத்து அன்லாக் செய்துவிட முடியுமே… அவரென்ன வர மாட்டேன் என்றா சொல்லப்போகிறார். ஆம், நிச்சயமாக அவர் காவல்நிலையம் வரப்போவதில்லை. ஏனென்றால் லினஸ் பிலிப் கடந்த மாதம் மார்ச் 23-ம் தேதி காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்தவர் . போதைப்பொருள் தொடர்பான தேடுதல் வேட்டையின் போது சுடப்பட்டார். காவல்துறைக்குப் போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் தேவைப்பட்ட நிலையில் அதற்கு ஒரே வழி லினஸ் பிலிப்பின் ஸ்மார்ட்போன்தான். அதை ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்குத் தேவையான தகவல்கள் ஏதாவது கிடைக்கலாம் எனக் காவல்துறையினர் நினைத்தார்கள்.
Picture Courtesy:Victoria Armstrong (facebook)
அவர் உயிரோடு இருந்தால் அவரை அன்லாக் செய்ய சொல்லியிருக்கலாம். இப்பொழுது ஒரே வழி பிங்கர்பிரிண்ட் மட்டும்தான். ஸ்மார்ட்போனில் இருக்கும் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனரை பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்து விடலாம் எனக் காவல்துறையினர் நினைத்தார்கள். எனவே இரண்டு காவலர்கள் லினஸ் பிலிப்பின் மொபைலை எடுத்துக்கொண்டு அவரது இறுதிச் சடங்கு நடக்கும் இடத்திற்குச் சென்றார்கள். அவரது குடும்பத்தினரிடம் விவரத்தைத் தெரிவித்து விட்டு சடலமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தவரின் விரலை எடுத்து ஸ்மார்ட்போனின் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் மீது வைக்கிறார்கள். மொபைல் அன்லாக் ஆகும் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்களால் எவ்வளவோ முயன்றும் மொபைலை அன்லாக் செய்ய முடியவில்லை. பாஸ்வேர்ட் மூலமாக அன்லாக் செய்வது மட்டும்தான் மீதமிருக்கும் ஒரே வழி. ஆனால் அதற்கு லினஸ் பிலிப் வாயைத் திறக்க வேண்டுமே, அதற்கும் வாய்ப்பே கிடையாது என்பதால் காவலர்கள் ஏமாற்றத்தோடு திரும்பி விட்டார்கள்.
மொபைலில் இருக்கும் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர்கள் பயன்படுத்த எளிதானதாக இருந்தாலும் சில நேரங்களில் சிலருக்கு இது போல சிக்கல்களை ஏற்படுத்தி விடுகின்றன. தொடக்கத்தில் பின் நம்பர் அதன் பிறகு பேட்டர்ன் என மாறிக்கொண்டே இருந்த மொபைல் லாக் வசதி ஒரு கட்டத்தில் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர்களில் வந்து நின்றது. மற்ற முறைகளை விடவும் கைரேகைகளை பாதுகாப்பிற்காகப் பயன்படுத்துவது எளிதாக இருந்தது. இந்த உலகில் ஒரே மாதிரியான கைரேகை வேறொருவருக்கு இருக்கச் சாத்தியமில்லை என்பதால் இந்த முறை மிகவும் பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஒரு மொபைலின் பின் நம்பரோ, பேட்டர்னோ தெரிந்தால் யார் வேண்டுமானாலும் அந்த மொபைலை அன்லாக் செய்து விட முடியும். ஆனால் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்களில் இந்தச் சிக்கல் கிடையாது மொபைலை அன்லாக் செய்ய மொபைலுக்கு உரியவரின் விரல் தேவைப்படும். சரி அப்படியென்றால் லினஸ் பிலிப்பின் மொபைலை காவல்துறையினரால் எதற்காக அன்லாக் செய்ய முடியவில்லை. இறந்துபோன ஒருவரின் விரலை வைத்தால் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர்கள் செயல்படதா?
ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர்கள் செயல்படும் விதம்
தொடக்கத்தில் இருந்த ஃபிங்கர்பிரின்ட் சென்சார்களில் ஆப்டிகல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்தத் தொழில்நுட்பம் கைரேகைகளின் புகைப்படங்களை பயன்படுத்தும். ஸ்கேனர்கரின் மேல் விரலை வைக்கும் பொழுது ரேகைகளின் ஹை ரெசொல்யூசன் புகைப்படம் சேமிக்கப்படும். அதன் பிறகு ,மறுமுறை விரலை வைக்கும் பொழுது ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்துடன் ரேகையை ஒப்பிட்டுப் பார்த்து இது செயல்படும். ஆனால் இதில் சில சிக்கல்கள் இருந்தன , ஆப்டிகல் சென்சார்களை எளிதாக ஹேக் செய்து விட முடிந்தது . அதற்கு பிரின்ட் எடுக்கப்பட்ட ஹை ரெசொல்யூசன் புகைப்படங்களே போதுமானதாக இருந்தது . மற்றொன்று இதை ஒரு ஸ்மார்ட்போனில் பயன்படுத்துவதற்கு இடம் சற்று அதிகமாகத் தேவைப்பட்டது.
அதன் பின்னர்தான் கெப்பாஸிட்டிவ் வகை ஃபிங்கர்பிரின்ட் சென்சார்கள் பயன்பாட்டிற்கு வந்தன. இன்றைக்கு பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பயன்படுவது இந்த வகை சென்சார்கள்தான். இவை மனித உடலில் இருக்கும் சிறிய அளவிலான மின்சாரத்தை ரேகைளை அடையாளப்படுத்தப் பயன்படுத்துகின்றன. விரல்களை உன்னிப்பாகப் பார்த்தால் அதில் மேடு பள்ளங்கள் இருப்பதைக் கானலாம். இந்த மேடு பள்ளங்களிடையே மின்னோட்டம் என்பது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இந்த வேறுபாட்டை மிகவும் நுணுக்கமாக சென்சார்கள் ஆராய்ந்து அந்த தகவல்களை டிஜிட்டலாக பதிவு செய்து கொள்கின்றன. மறுமுறை விரல் சென்சாரின் மீது வைக்கப்படும் பொழுது ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களோடு ஒப்பிடுகின்றன. முன்னர் இருந்த இடங்களில் இருப்பதைப் போலவே மின்சார வேறுபாட்டை உணர முடிந்தால் மட்டுமே அன்லாக் செய்வதற்கான அனுமதியை அளிக்கின்றன.
இறந்துபோனவரின் விரலை வைத்து மொபைலை அன்லாக் செய்ய முடியுமா ?
இப்பொழுதுள்ள ஸ்மார்ட்போன்களில் இருக்கக்கூடிய கெப்பாஸிட்டிவ் ஃபிங்கர்பிரின்ட் சென்சார்கள் மின் கடத்தும் தன்மையைத்தான் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. எனவே இறந்த மனிதரின் விரலை வைத்து மொபைலை அன்லாக் செய்வது சற்று கடினமான விஷயம்தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒருவர் இறந்துவிட்டால் அவரது உடலில் இயல்பாகவே இருக்கும் மின்சாரம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே சென்சார்களால் விரலை ரேகைகளை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போய் விடுகிறது. உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட விரலாலோ உயிரற்ற உடலில் உள்ள விரல் மூலமாகவோ மொபைலை அன்லாக் செய்ய முடிவதில்லை. மின் கடத்தும் தன்மைதான் இங்கே முக்கியமான விஷயம். இதன் காரணமாகத்தான் விரலில் ஈரம், வியர்வை இருந்தால் மேடு பள்ளங்களிடையே மின்சாரம் சீராக இருப்பதால் சென்சார்களால் உணர முடிவதில்லை. அதே வேளையில் இறந்தவரின் உடலில் ரத்த ஓட்டம் இருக்காது என்பதால் உடலுறுப்புகளில் மாற்றம் ஏற்படும் விரல்களில் சுருக்கம் ஏற்படும். இது போன்ற காரணங்கள்தான் இறந்துபோனவரின் விரலை வைத்து மொபைலை அன்லாக் செய்வது கடினமான ஒன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் இந்தத் துறையை சேர்ந்த ஆய்வாளர்கள். அதே நேரத்தில் இறந்த சில மணி நேரங்களில் விரலை சென்சார்கள் உணர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவிக்கிறார்கள். லினஸ் பிலிப் விஷயத்தில் மொபைலை காவல்துறையினரால் அன்லாக் செய்ய முடியாதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஒரு வேளைக் காவல்துறையினர் முன்னரே முயன்றிருந்தால் மொபைலை அன்லாக் செய்திருக்கக்கூடும்.