உலக மக்களை கண்ணீரில் ஆழ்த்திய மரணம்!

பிரித்தானியாவில் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாழ்வோடும் சாவோடும், இறுதியாக நீதித்துறையோடும் போராடிய Alfie Evans(ஆல்ஃபீ இவான்ஸ்) நேற்றிரவு உள்ளூர் நேரப்படி 2.30 மணியளவில் சுவாசிப்பதை நிறுத்தினான்.

நீதித்துறையுடன் வெகு நீண்ட போராட்டத்திற்குப்பின் திங்களன்று செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட்ட பிறகும் ஒரு வாரம் உயிர் வாழ்ந்த ஆல்ஃபீ நேற்றிரவு மரணமடைந்ததாக அவனது தந்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில் “எனது கிளாடியேட்டர் தனது கேடயத்தைக் கீழே வைத்துவிட்டு பறந்துபோய் விட்டான், மனமொடிந்து போயிருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த செய்தி வெளியான இரண்டு மணி நேரத்தில் அது 70,000 பேரால் விரும்பப்பட்டது.

ஏராளமானவர்கள் ஆல்ஃபீக்கு ட்விட்டரில் இரங்கல் செய்திகளை அனுப்பி வருகிறார்கள்.

அவன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் முன்பு ஏரளமானவர்கள் மலர்க் கொத்துக்களையும் பொம்மைகளையும் வைத்து அவனுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தங்களுக்கு இது வரை ஆதரவு தெரிவித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட ஆல்ஃபீயின் தந்தை டாம் இவான்ஸ் மீண்டும் அவர்களை தங்கள் அன்றாடக் கடமைகளுக்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மூளை தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த இவான்ஸ் இனி பிழைக்க மாட்டான் என்று கூறி அவனது செயற்கை சுவாசக் கருவிகளை அகற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆல்ஃபீயின் தந்தை ஒவ்வொரு நீதிமன்ற வாசலாக ஏறி இறங்கினார்.

பல்வேறு நாட்டு தலைவர்களும், போப் ஆண்டவரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ஆல்ஃபீக்கு தனது ஆதரவைத் தெரிவித்தும் பிரித்தானியா தன் முடிவை மாற்றவில்லை, அவனை இத்தாலிக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கும் முடிவுக்கோ, ஏன் அவனை வீட்டுக்கு கொண்டு செல்லும் முடிவுக்கோ கூட சம்மதிக்கவில்லை. ஏராளமானோர் கையெழுத்திட்ட மனுவுக்கு ராணியார் பதிலளிக்கவே இல்லை.

கடந்த திங்களன்று ஆல்ஃபீயின் செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து ஒரு வாரம் தனது தாயின் நெஞ்சிலேயே படுத்திருந்த ஆல்ஃபீ இறுதியில் நேற்றிரவு விண்ணுக்குச் சென்று விட்டான்.

தொடர்ந்து போராடிய ஆல்ஃபீயின் பெற்றோருக்கு ஏராளமானோர் தங்கள் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.