எஸ்.வி.சேகர் கைதாகிறார்?

பெண் பத்திரிகையாளர்களை குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும், நிறுவனங்களில் பணி புரிவது குறித்தும் அவதூறாக பேசும் விதத்தில் சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார்.

எஸ்.வி.சேகரின் இந்த பேஸ்புக் பதிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுத்ததையடுத்து தனது சர்ச்சைக்குரிய பதிவை எஸ்.வி சேகர் நீக்கியதுடன், மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில், எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

புகார் மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவுக்கு மாற்றப்பட்டு அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி எஸ்.வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி. சேகரை கைது செய்ய காவல்துறையினருக்கு தடைவிதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

மேலும் முன் ஜாமீன் தொடர்பான வழக்கு கோடைகால முதல் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.