வாழை இலை என்பது வாழை மரத்தின் இலையாகும். இது உணவு பரிமாறும் தட்டாகவும், அலங்காரப் பொருளாகவும், படையல் விரிப்பாகவும் மற்றும் சமையலிலும் பயன்படுகிறது.
இந்து மற்றும் புத்த சமய பழக்கங்களில் அலங்காரப்பொருளாக பண்டிகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் உணவு உட்கொள்ளும் தட்டாகப் பயன்படுகிறது.
நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்ற எத்தனையோ பாரம்பரியமன விஷயங்களை, நாகரிகம் வளர்ந்த காரணத்தினாலும், எமது வேலைப்பழுக்களாலும் நாம் மறந்து கொண்டே வருகின்றோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது.
வாழை இலையில் சாப்பிடுவது என்பது நமது பண்பாடு மட்டுமல்ல. அதில் எத்தனையோ அறிவியலான, ஆரோக்கியமான விடயங்கள் உள்ளன.
வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.
வாழை இலையில் சாப்பிட்டால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும்.
தீக்காயம் பட்டவரை வாழை இலையில் படுத்துவது வழக்கம். வாழை இலை படுக்கையும் வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும், நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக் கொடுப்பார்கள்.
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மையானது (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.
வாழை இலையில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். அதோடு மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன.
வாழை இலையில் இருக்கும் பாலிஃபினல்(Polyphenol), செல்களில் உள்ள டி.என்.ஏ.வை கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது.
சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.
சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிஃபினல்(Polyphenol), சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கல்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.
வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான். மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்பும் கூட வாழை இலை ஒட்சிசனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும். மேலும், வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது.