தினமும் மீன் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வராதா?

ஆரோக்கியமான உணவு பட்டியலில் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. மீனில் பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன.

மீனை தொடர்ந்து சாப்பிடுவதால், பல நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இதயம் சார்ந்த நோய்கள் கட்டுப்படுகின்றன.

மீனை தினமும் உங்கள் உணவு பட்டியலில் சேர்ப்பதால் உண்டாகும் ஆரோக்கிய நலன்களை இப்போது காண்போம்.

இதய நோய் அபாயம் குறைகிறது

தினமும் மீன் சாப்பிடுவதால், இரத்தக் குழாய் மற்றும் இதயம் சார்ந்த நோய் அபாயங்கள் குறைகின்றன. இதய ஆரோக்கியத்திற்கு உகந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீனில் அதிகம் உள்ளது. இந்த சத்து, அழற்சியை குறைத்து, இதயத்தை பாதுகாக்கிறது. இதனால் நோய்கள் கட்டுபடுகின்றன.

அல்சைமர் நோய் குறைகிறது

மூளை சீராக செயலாற்ற மீன் உணவுகள் பெருமளவில் உதவுகின்றன. இதனால் அல்சைமர் நோய்க்கு மீன் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. தொடர்ந்து மீன் சாப்பிடுவதால் மூளை சீரழிவு குறைகிறது. மூளை செயல்பாடுகளில் ஏற்படும் பல்வேறு சிக்கலும் தடுக்கப்படுகிறது.

மனச்சோர்வு குறைகிறது

மனச்சோர்விற்கான அறிகுறியை உணர்பவர்கள் மீனை சாப்பிடலாம். மீன் அல்லது மீன் எண்ணெய் மனச்சோர்வின் அறிகுறியை குறைத்து சீரான மன நிலையை தருகிறது. இதனால் மன ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

வைட்டமின் டி யின் ஆதாரம்

மீனில் வைட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் டி சத்து, டையட் உணவிற்கான ஆதாரமாக விளங்குகிறது. உணவில் உள்ள கால்சியம் சத்தை உறிஞ்சி, எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த வைட்டமின் டி மிகவும் அவசியம். வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள், மீனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆர்த்ரிடிஸ் குறைகிறது

முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் மீனை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முடக்கு வாதம் என்பது மூட்டுகளில் ஏற்படும் நாட்பட்ட வீக்கத்தின் காரணமாக ஏற்படுவது. மீனை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால், வீக்கம் மற்றும் வலி குறைகிறது.

நீரிழிவு

கொழுப்பு மீன்களை உட்கொள்வதால், டைப் 1 நீரிழிவு நோய் தடுக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. மீனில் வைட்டமின் டி அதிகமாக இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.