ஸ்டாலினையும் அழைத்துச் செல்ல விரும்புகிறேன்….! முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

நான் நினைத்தால் தனியாக சென்று பிரதமரை சந்திக்க முடியும். ஆனால், தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினையும் அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி பிர்சனை தொடர்பாக அதிமுக சார்பில் நேற்று மாலை திருவாரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘’காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என திமுக செயல் தலைவஎர் ஸ்டாலின் குற்றம் சொல்கிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அதில் பங்கு வகித்த திமுக ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘’காவிரி பிரச்னையில் தி.மு.க கடந்த காலங்களில் செய்த துரோகங்களை மறைக்கதான், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராக நடைப்பயணம் போகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை என எங்கள் மீது குற்றம் சொல்கிறார். 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வெளியானது. அப்பொழுது மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது. நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அப்பொழுதே திமுக அழுத்தம் கொடுத்திருந்தால், கடந்த 11 ஆண்டுகளாக இப்பிரச்னை நீடித்திருக்காது. விவசாயிகள் இத்தனை ஆண்டுகளாக துயரங்களைச் சந்தித்திருக்க மாட்டார்கள்.

ஜெயலலிதா கொடுத்த அழுத்ததின் காரணமாகவே 2003-ம் ஆண்டு மத்திய அரசின் அரசிதழில் காவிரி நடுவர் இறுதித்தீர்ப்பு வெளியிடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. நான் நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் பிரதமரை சந்தித்து பேச முடியும். ஆனால் காவிரி தொடர்பாக, நான் பிரதமரை தனியாக சந்தித்து பேச விரும்பவில்லை. அதுபோல் செய்தால் நன்றாக இருக்குமா?  எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட இங்குள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் அழைத்து சென்று பிரதமரை சந்திக்க விரும்புகிறேன்’  என்று தெரிவித்தார்.