எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடவில்லையா?

ஒல்லியான தேகம் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க, உணவே மருந்தாக செயல்படும் மருத்துவ முறையை பின்பற்றினால் போதும்.

இயற்கையான முறையில், எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் உடல் எடையை அதிகரிப்பதற்கான வழிமுறையை இங்கு காண்போம்.

வெண்ணை மற்றும் சர்க்கரை

உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர், ஒரு தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட வெண்ணை மற்றும் சம அளவு சர்க்கரை சேர்ந்த கலவையை ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால், உடல் எடை மாற்றத்தை காணலாம்.

மதியநேர தூக்கம்

மதிய வேளைகளில் சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரத்திற்கு குட்டித்தூக்கம் தூங்க வேண்டும். இதன்மூலம், உடல் எடை அதிகரிப்பது மட்டுமின்றி, இரவில் நிம்மதியான தூக்கத்தையும் வரவழைக்கும்.

பழங்கள்

ஒரு மாம்பழத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட வேண்டும். மாம்பழத்தை சாப்பிட்டவுடன், ஒரு தம்ளர் சூடான பால் குடிக்க வேண்டும்.

உலர்ந்த அத்திப்பழம் மற்றும் திராட்சை ஆகியவை கலோரிகளை வழங்கும் பழங்களாகும். எனவே, 6 உலர்ந்த அத்தி மற்றும் சுமார் 30 கிராம் உலர்ந்த திராட்சையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அவற்றை இரண்டு பகுதிகளாக சாப்பிட வேண்டும்.

வாழைப்பழங்கள் கலோரிகளால் நிரம்பியுள்ளன. எனவே, தினமும் காலையில் ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, அதனுடன் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்த மிதமான சூட்டில் பால் அருந்த, உடல் எடை கூடும்.

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெய் அதிக கலோரிகளைக் கொண்டது என்பதால், இதனை ரொட்டி அல்லது பேக்கல் மீது பயன்படுத்தினால், உடல் எடை வேகமாக கூடும்.

உருளைக்கிழங்கு

கார்போஹைட்ரேட்டுகள் உருளைக்கிழங்குகளில் நிரம்பியுள்ளதால், இதுவும் உடல் எடையை அதிகரிக்கும். இதனை கிரில் செய்து அல்லது பிரஞ்ச் பிரையாக உண்ணலாம். பிரஞ்ச் பிரையாக சாப்பிட நினைத்தால், நுகர்வை ஒரு வாரத்திற்கு இரண்டு முறை என கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆலி விதைகள் ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்துள்ளன. எனவே, இவற்றை உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல பெரும்பாலான நட்ஸ் சுவை, ஊட்டச்சத்து மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவற்றை உண்டாக்க உதவும். எனினும் தொடர்ந்து சாப்பிடக் கூடாது.

பாதாம் பால்

பாதாம் பால் உடல் எடையை கூட்ட உதவும் மற்றொரு உணவு ஆகும். பாதாமுடன், உலர்ந்த அத்திப்பழம் மற்றும் பேரீச்சையை சேர்த்து பாலை கொதிக்க வைக்க வேண்டும். ஒரு மாதம் வரை, ஒவ்வொரு நாளும் ஒரு வேளைக்கு இந்தப் பாலை அருந்த வேண்டும்.

மேலும், வேக வைத்த பாதாம், அத்திப்பழம் மற்றும் பேரீச்சையை எறியாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் உடல் எடை அதிகரிக்கும்.

யோகா பயிற்சி

ஒருவரது உடல் எடை குறைவதற்கு முக்கியமான காரணம் மன அழுத்தமாகும். வேலை பளு காரணமாக உண்டாகும் மன அழுத்தத்தை போக்க யோகா அல்லது மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மன அழுத்தம் குறைந்தாலே உடல் எடை அதிகரிக்கும்.