நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க கூட்டமைப்பு முன்வைக்கும் நிபந்தனை….

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமாயின் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிக்க மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிக்க நாங்கள் ஆதரவு வழங்க தயார். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளோம். 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போதும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. எனினும் 1948 ஆம் ஆண்டு ஆரம்பித்த தேசிய பிரச்சினை பாரிய பிரச்சினையாக மாறி பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின.

இதன் மூலம் மிகப் பெரிய அழிவு ஏற்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க முயற்சிப்பது போல், பெரிய பிரச்சினையாக இருந்து வரும் தேசிய பிரச்சினைக்கும் தீர்வுகாண வேண்டும்” என எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.