‘திவாகரன் ஒரு மனநோயாளி’ – டி.டி.வி கடும் தாக்கு!

திவாகரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என டி.டி.வி தினகரன் கோவையில் கடுமையாகச் சாடியுள்ளார்.

டி டி வி தினகரன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டி.டி.வி தினகரன்,  ”திவாகரன் போன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு பதில் சொல்லவிரும்பவில்லை. திவாகரன் குறித்த கேள்விகளுக்குப் பதில் சொல்லி, என் நேரத்தை வீணடிக்கமாட்டேன். பி.ஜே.பி-க்கு தமிழகத்தில் வாக்கு வங்கி கிடையாது. இதனால், கர்நாடக சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து அவர்கள் செயல்படுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கமாட்டார்கள்.
மனித வள மேம்பாட்டுத் துறை விருதுகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் வரைபடத்தில் இருந்து தமிழகத்தை எடுத்து விட்டனர் என்பதைத் தான் உணர்த்துகிறது.

20 ரூபாய் நோட்டு விவகாரத்தில், ஆர்.கே.நகரில் முற்றுகையிட்ட பெண்கள் மதுசூதனன் ஆட்கள்தான். அதற்கான புகைப்பட ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. தமிழகம் முழுவதும், கூட்டுறவுச் சங்க தேர்தல்களில் முறைகேடும், அராஜகமும் தான் நடக்கிறது. 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.