மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய அதிபரும் மௌலவியும்

திருகோணமலை – மூதூர் ஜின்னா நகரில் உள்ள அரபிக் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மீது அதிபரும், அக்கல்லூரியில் கல்வி கற்றுக் கொடுக்கும் மௌலவி ஒருவரும் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட மாணவர் கிண்ணியா தள வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச் சம்பவம் தொடர்பாக மூதூர் பொலிஸார் நேற்று (30) திங்கட்கிழமை மாலை கிண்ணியா வைத்திய சாலைக்கு நேரில் வருகை தந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

கிண்ணியா பெரியாற்று முனை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய அமீன் – முகம்மது பாசீத் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவனின் கன்னத்தில் அதிபர் அரைந்ததாகவும், மௌலவி ஒருவர் பனை மட்டையால் தாக்கியதாகவும், இச் சந்தர்ப்பத்தில் மாணவர் கீழே விழவும் அம் மாணவன் மீது ஏறி மிதித்து தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

குறித்த மாணவனில் உடம்பில் 29 இடங்களில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.