நல்லாட்சி அரசாங்கத்தின் 3ஆவது அமைச்சரவை மாற்றம் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.இதன்போது 18 பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டதுடன், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை தினம் புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுள் 6 பேர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்திருந்தார்கள்.
இவர்களுடைய பதவி வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிப்பதற்கும்இ ஏனைய அமைச்சர்களின் அமைச்சுப்பதவிகளில் மாற்றம் செய்யவும் கடந்த சில நாட்களாக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.அந்த வகையில், இன்று அனைவரும் எதிர்பார்த்த நாள் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதில் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான ரவி கருணாநாயக்கவுக்கும், முன்னாள் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவுக்கும் புதிய அமைச்சுப்பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.அத்துடன், அமைச்சரவை மாற்றம் நடைபெற்ற ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவும் வருகைத்தந்திருந்தார்.இதன்மூலம் இவருக்கு புதிய அமைச்சுப்பதவி கிடைப்பது உறுதி என்ற செய்திகளும் வெளிவந்தன.
அந்த வகையில், விஜயதாச ராஜபக்ஸவுக்கு உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சுப்பதவி கிடைத்தது.ஆனால், ரவி கருணாநாயக்கவுக்கு ஏமாற்றமே கிடைத்தது. எனினும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பின் போது கட்சியின் உப தலைவர் பதவியை ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்பட்டது.இது போன்றே ‘சட்டம் ஒழுங்கு அமைச்சு’ பதவி தொடர்பிலும் சர்ச்சைகள் எழுந்திருந்தன.
சட்டம் ஒருங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சராக இருந்த சாகல ரட்நாயக்க அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டதுடன், சட்டம் ஒழுங்கு அமைச்சு பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருந்தன.இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சட்டம் ஒழுங்கு அமைச்சு ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு கிடைத்தது.அந்த வகையில், மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என செய்திகள் வெளிவந்ததிலிருந்து ‘சரத்பொன்சேகாவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு’ என்ற கருத்தும் மேலோங்கியது.
ஆனால், இறுதி நேரத்தில் அதுவும் பொய்யாகிப் போனது. பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு அவருக்கு இருந்த அமைச்சுப்பதவியுடன் கூடுதலாக வனஜீவராசிகள் அமைச்சே கிடைத்துள்ளது.இதன்மூலம் இந்த அமைச்சரவை மாற்றத்தால் ரவி மற்றும் பொன்சேகாவுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.