flash back: உலகம் புலிகளை கடுமையாகக் கையாளப்போகிறது என்பதை எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் அறிந்திருந்தார்.
பத்து வருடங்களுக்கு முன்பு 2006 நவம்பர் மூன்றாம் வாரமளவில் லண்டனில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு கிடைத்தது.
அது தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) அமைப்பின் அரசியல் ஆலோசகரும் மற்றும் மூலோபவியலாளருமான அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கத்திடம் இருந்து வந்திருந்தது.
கடுமையான அரசியல் வேறுபாடுகள் காரணமாக கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக எங்களிடையே பேச்சு வார்த்தைகள் இருக்கவில்லை என்பதினால் நான் மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளானேன்.
எனினும் எங்களில் பலரும் அன்புடன் பாலா அண்ணை என்று விளிக்கும் அவருடன் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, ஏனென்றால் அவர் கடுமையான சுகவீனமுற்றிருக்கின்றார் மற்றும் அவருடைய நாட்கள் எண்ணப்படுகின்றன என்று முன்பே நான் கேள்விப்பட்டிருந்தேன்.
ஆரம்பத்திலேயே பாலா அண்ணை தான் தனது சில பழைய சகாக்கள் நண்பர்கள், மற்றும் தொடர்பாளர்களுடன் தொலைபேசி மூலம் பேசி வருவதாகச் சொன்னார்.
கொழும்பில் நான் சண்டே லீடரில் எழுதிவரும் காலங்களில் பாலசிங்கம் இரண்டு வருடங்களுக்கு மேலாக தகவல்களை வழங்கும் ஒரு மிக முக்கிய ஆதாரமாக இருந்துள்ளதினால் அந்தப் பட்டியலில் ஊடகவியலாளர் என்கிற எனது தகுதி மூலமாக நான் அதில் தொடர்பாளர்களில் ஒருவனாக இடம்பெற்றிருக்கிறேன்.
வெளிப்படையாக அவர் அப்படிச் சொல்லாவிட்டாலும் கூட, அந்த இனிய இரவில் அமைதியாக வெளியே செல்ல நினைக்கும் ஒரு மனிதனின் பிரியாவிடை அழைப்புத்தான் அது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்;.
தமிழர்களிடையே பாலசிங்கம் அல்லது பாலா அண்ணை என பொதுவாக அழைக்கப்பட்டு வந்த அவருக்கு பித்த நாளத்தில் புற்றுநோய் பாதிப்பு அதாவது, பித்த நீர் அமைப்பில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் அபூர்வமான ஒரு நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
அந்த புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் இருந்ததுடன் மற்றும் அது அவரது கல்லீரல்,சுவாசப் பைகள், அடிவயிறு மற்றும் எலும்புகள் போன்ற உடலுறுப்புகள் எங்கும் பரவியிருந்தது.
புற்றுநோய் பீடிப்பதற்கு முன்பே பாலா ஒரு உடல் நலக் குறைவுள்ள மனிதராகத்தான் இருந்தார்.
அவர் 35 வருடங்களுக்கு மேலாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வந்தார் மற்றும் 90 களின் பிற்பகுதிகளில் அவர் சிறுநீரக நோயின் பாதிப்புக்கு உள்ளாக அதன் காரணமாக அவர் 1999ல்சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கும் உள்ளாகியிருந்தார்.
இப்போது அவர் உயிர்வாழும் காலக்கெடுவாக மருத்துவர்கள் ஆறு முதல் ஒன்பது வாரம் என அறிவித்திருந்தார்கள்.
பாலசிங்கம் தனது வழக்கமான நகைச்சுவை பேச்சுக்கள் மற்றும் நடிப்புகளை மேற்கொண்டு மகிழ்வான தன்மையிலிருந்தார்.
எங்கள் உரையாடல்கள் தொடர்ந்து முன்னேறியபோது அவர் மிகவும் கவலையாக இருக்கிறார் என்பதை என்னால் உணரமுடிந்தது. அது வரவிருக்கும் அவரது மரணத்தைக்குறித்து அல்ல ஆனால் வேறு ஏதோ ஒன்றைக் குறித்ததாக இருந்தது.
விரைவிலேயே திடீரென்று பேசிய கவனயீனமான பேச்சுக்கள் மூலம் அது வெளிப்பட்டது.
“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”.
அதில் அவர் தம்பி எனக் குறிப்பிட்டது எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, இவரது இளமைக்காலத்தில் இவர் தம்பி என்று அழைக்கப்பட்டார்.
பாலசிங்கம் தொடர்ந்து கூறுகையில் சர்வதேச சமூகத்தினர் புலிகளின் நடத்தையையிட்டு மிகுந்த கோபத்தில் உள்ளார்கள்.
புலிகள் உடனடியாக ஒரு திருத்தற் போக்கை கடைப்பிடித்தல் மற்றும் ஒரு ஏற்றுக்கொள்ளத்தக்க செயல்பாட்டுக்கு வருதல் என்பதைச் செய்யாவிட்டால் மேற்கத்தைய நாடுகள், சீனா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா என்பன ராஜபக்ஸ ஆட்சிக்கு பின்துணை வழங்கி எல்.ரீ.ரீ.ஈ இராணுவ ரீதியாக தோல்வி அடைவதையும் மற்றும் அது அழிவடைவதையும் உறுதி செய்யப் போகின்றன என்றார்.
நான் பாலசிங்கத்திடம் வரப்போகும் நிச்சயமான நிலையை பிரபாகரன் அறியும்படி செய்து அதற்கு ஏற்றபடி நடந்து கொள்வதற்கு பிரபாகரனை மாற்றுவதற்கு அவரால் ஏன் முடியவில்லை என்று கேட்டேன்.
அதற்கு பாலா தான் எவ்வளவோ முயற்சி செய்தும் அதில் தோற்றுவிட்டதாக வருத்தத்துடன் பதிலளித்தார்.
மேலும் பேசுகையில் பாலசிங்கம் சொன்னது, வட பகுதி பெருநிலப்பரப்பான வன்னியில் உள்ள கெப்பாப்புலவு என்ற இடத்தில் நடந்த ஒரு கூட்டத்திற்கு பிரபாகரனை நேரடியாக வரச்செய்து நிலமைகளையும் காரணங்களையும் புரிந்து கொள்ளும்படி அவரிடம் தான் வேண்டிக் கொண்டதாக. ஆனால் பிரபாகரன் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை என்று பால அண்ணை புலம்பினார்.
“வீரமார்த்தாண்டன் (பாலசிங்கம் எரிச்சல் வரும்போது பிரபாகரனை அப்படித்தான் குறிப்பிடுவார்) அதற்கு என்னிடம் எப்படி நடந்து கொண்டார் தெரியுமா?” என பாலா அண்ணை தமிழில் கேட்டார். பின்னர் அவர் தொடர்ந்து விளக்குகையில்:
“அந்த கடினமான பிரச்சினையை பற்றி நான் பேச ஆரம்பிக்கும் போதே பிரபாகரன் திடீரென இடைமறித்து என்னிடம் தமிழ்நாட்டின் பிரபல படத்தயாரிப்பாளரான சேரன் இயக்கிய ஆட்டோகிராப் என்கிற தமிழ்படத்தை பார்த்து விட்டீர்களா என்று கேட்டார்.
நான் இல்லை என்று பதிலளித்ததும் அப்படியானால் அதை நாங்கள் உடனே பார்க்கவேண்டும் என்று பிரபாகரன் சொன்னனார். அதனால் அந்தப்படத்தின் டிவிடி ஒன்று ஓடவிடப்பட்டது, நாங்கள் அமைதியாக தொலைக்காட்சியில் அதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அது முடிவடைந்ததும் திரும்பவும் நான் சூழ்நிலையை பற்றிய பேச்சை ஆரம்பித்தேன். அப்போது பிரபாகரன் நாங்கள் திரும்பவும் அந்தப் படத்தை பார்ப்போம் என்று சென்னார்.
ஆகவே நாங்கள் அதை திரும்பவும் பார்த்தோம்.
அது முடிவடைந்ததும் நான் மீண்டும் பேச்சை ஆரம்பிக்க முயற்சித்தேன்.
பிரபாகரன் ஒரு குறும்புச் சிரிப்புடன் “இன்னொருக்கா பாப்பம்” என்றார். அந்த சாடைக் குறிப்பை புரிந்து கொண்ட நான் அவரிடம் இருந்து விலகினேன். அவர் அப்படி நடந்து கொண்டால் அவரது கடுமையை எதனாலும் குறைக்க முடியாது என்பதை அனுபவம் மூலம் நான் நன்கறிவேன்”.
வேறு மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களிடம் இந்த சூழ்நிலை பற்றி நீங்கள் விளக்க முயற்சிக்கவில்லையா, என நான் பாலசிங்கத்திடம் கேட்டபொழுது, தமிழ்செல்வன், கஸ்ட்ரோ, பொட்டு அம்மான், போன்ற வன்னியில் இருந்தவர்களும் மற்றும் நியுயோர்க்கில் இருந்த உருத்திரகுமாரன் போன்றவர்களும், நோர்வேயின் அனுசரணையுடன் ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கு இடையே உருவான சமாதான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், பிரபாகரனின் மனதில் தனக்கு எதிராக பாரபட்சமான மனநிலையை வளர்த்து வருவதாக அவர் பதிலளித்தார்.
அதற்கு மேலும் அவர்கள், ஸ்ரீலங்கா ஆயுதப் படையினரை தோற்கடிக்க முடியும் மற்றும் ராஜபக்ஸவுக்கு எதிராக புலிகளின் பின்னால் முழு உலகமும் திரண்டு நின்று ஆதரவளிக்கும் என்று பிரபாகரனை நம்பவைக்கும் தவறான தகவல்களையும் வழங்கி வருகிறார்கள்.
பாலசிங்கம் மேலும் சொன்னது, மூத்த தலைவர்களான சூசை, பேபி சுப்பிரமணியம், பாலகுமாரன் மற்றும் பரா போன்றவர்கள் இக்கட்டான சூழ்நிலையை புரிந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் யதார்த்தத்தை புரியவைத்து பிரபாகரனை சம்மதிக்க வைக்கும் சக்தியற்றவர்களாக அவர்கள் உள்ளார்கள்.
வன்னி மண்ணின் துர்ப்பாக்கியசாலிகள்
பாலசிங்கம் நிறுத்தாமல் இருமும் வரை, நாங்கள் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசியிருப்போம். அவரால் மேலும் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதால் நாங்கள் எங்கள் சம்பாஷணையை நிறுத்த வேண்டியதாகிவிட்டது.
போரின் தீவிரம் தவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்டது என்பதை என்னால் காண முடிந்ததினால் இந்த உரையாடலினால் நான் மிகவும் தீவிரமான கவலை அடைந்தேன்.
அத்தகைய விரிவாக்கத்தின் விளைவு பெரிய அளவிலான மரணங்கள், இடப்பெயர்ச்சி மற்றும் அழிவு மாத்திரமே. வன்னி மண்ணின் துர்ப்பாக்கியசாலிகள் – அப்பாவி குடிமக்கள் – எண்ணற்ற இடர்கள் மற்றும் கவலைகளால் பாதிக்கப்படப் போகிறார்கள்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் எனது அச்சம் நியாயமானது என்பதை எனக்கு உணர்த்தியது. சிக்கலில் மாட்டிக்கொண்ட குடிமக்கள் மனிதாபிமானப் பேரழிவை அனுபவித்தார்கள்.
அதற்கு மேலும் சர்வதேச சமூகம் புலிகளை கடுமையாக கையாளப்போகிறது என்கிற பாலசிங்கத்தின் பேரிடரை முன்னறிவிக்கும் அச்சம் கூடச் சரியானது என நிரூபணமாயிற்று.
அப்போது அவர்கள் கொழும்பை மட்டும் எல்லாக் கெட்ட வேலைகளையும் செய்யும்படி விட்டார்கள் இப்போது சாட்டப்பட்டிருக்கும் யுத்தக் குற்றங்களை விசாரிக்க விரும்புகிறார்கள்.
பாலசிங்கத்துடனான அந்த கடைசி உரையாடல் மேலும் ஏராளமான விடயங்களை எனக்குத் தீர்த்து வைத்தது.
அவற்றில் முக்கியமானது அவருடனான தவறான புரிந்துணர்வு (சதாரணமாக சொன்னால்). எல்.ரீ.ரீ.ஈ யினைப் பற்றி நான் விமர்சிக்க ஆரம்பித்தது 1995ல்.
சந்திரிகா குமாரதுங்கவுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் முறித்ததுடன் யுத்தத்தையும் பிரகடனப் படுத்தியபோதுதான்.
இதற்காக நான் ஒரு விலையும் கொடுததேன், கனடாவிலுள்ள புலிகள் எனக்கு சொந்தமாக நான் ஆசிரியராக இருந்து நடத்தி வந்த மஞ்சரி என்கிற தமிழ் வார இதழுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
அவர்கள் அதைத் தடை செய்தார்கள். பிரவாகம்போல பெருகிவந்த மரண அச்சுறுத்தல்களால் என்னைத் தடுக்க முடியவில்லை, அதனால் புலிகள் அந்த பத்திரிகையை விற்கும் தமிழ் கடை உரிமையாளர்களையும் மற்றும் பெரும்பான்மையான விளம்பரதாரர்களையும் இலக்கு வைக்கத் தொடங்கினார்கள்.
ஒரு டொலர் என விலை நிர்ணயிக்கப்பட்ட 48 பக்கங்களைக் கொண்ட பரபரப்பு சஞ்சிகையான மஞ்சரியில் 22 பக்கங்கள் விளம்பரத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.
கிட்டத்தட்ட 5,000 பிரதிகள் வரை அது விற்பனையானது.
புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்கள் காரணமாக அநேக கடைகள் அந்த சஞ்சிகையை விற்பதை நிறுத்திக் கொண்டன.
அந்த சஞ்சிகையின் பக்கங்கள் 24 ஆகச் சுருங்கியதுடன் விளம்பரத்துக்காக 2 பக்கங்கள் மட்டுமே இருந்தன. விற்பனை மூன்று இலக்கமாக சரிந்தது.
புலிகளின் பாதையை எனது முழங்கால்களில் மண்டியிட்டு பின்தொடர்ந்து உயிர்வாழ்வதற்கு மாறாக எனது கால்களிலேயே சாவது என்பதை நான் தேர்வு செய்து அந்த பத்திரிகையை வெளியிடுவதை 1996 ஏப்ரலுடன் நிறுத்திக்கொண்டேன்.
அந்தப் பத்திரிகையில் நானும் மற்றும் எனது மனைவியும் முழுநேர ஊழியர்களாக கடமையாற்றினோம்.
அதற்கும் மேலாக எங்களிடம் வேறு ஒன்பதுபேர்கள் பகுதிநேர ஊழியர்களாகக் கடமையாற்றினார்கள்.
பத்திரிகை நிறுத்தப் பட்ட அந்த நேரத்தில் பலத்த பொருளாதார அடி எங்களுக்கு ஏற்பட்டது.
நான் ஆங்கில ஊடகத்துறைக்கு மீள் பிரவேசம் செய்ததினால், மஞ்சரியின் மறைவு எனக்கு மறைமுகமான ஆசீர்வாதமாகவே இருந்தது.
நான் ஒரு ஊடகவியலாளனாக வேலையை ஆரம்பித்தது கொழும்பில் வீரகேசரிப் பத்திரிகையில் தமிழில் எழுதியே.
நான் ஆங்கில ஊடகத்துறைக்குள் நுழைந்தது ‘த ஐலன்ட்’ மற்றும் பின்னர் ‘த ஹிந்து’ பத்திரிகைகளில் வேலை செய்தது மூலம்.
நான் கனடாவுக்கு வந்த பின்னர் நான் “செந்தாமரை” மற்றும் “மஞ்சரி” ஆகிய தமிழ் வார இதழ்களை ஆசிரியராக இருந்து நடத்தியதால் மீண்டும் தமிழ் ஊடகத்துறைக்கு திரும்ப வேண்டியதாகிவிட்டது.
இப்போது நான் ‘த ஐலன்ட்”, மற்றும் பின்னர் “த சண்டே லீடர்”, “த நேசன்” மற்றும் இப்பொழுது டெய்லி மிரர் மற்றும் “டெய்லி பினான்சியல் ரைம்ஸ்” ஆகிய பத்திரிகைகளுக்கு எழுதுவதால் திரும்பவும் ஒரு முறை ஆங்கில ஊடகத்துறைக்குள் நுழைந்து விட்டேன்.
தற்செயலாக, எனக்குத் தொட்டிலாக இருந்த வீரகேசரி உட்பட கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகள் எல்.ரீ.ரீ.ஈக்குப் பயத்தில் நான் எனது சொந்தப் பெயரில் தமிழில் எழுதுவதை விரும்பவில்லை.
புனைபெயரில் தமிழில் எழுதுவதற்கு வந்த வாய்ப்புகளை நான் உதறிவிட்டேன். அதனால் கடந்த 20 வருடங்களாக நான் ஆங்கில ஊடகவியலாளனாகவே இருக்கிறேன்.
என்னை மௌனமாக்கும் வகையில் எல்.ரீ.ரீ.ஈ எனது பத்திரிகையை நிறுத்திவிட்ட போதிலும் என்ன நடந்தது தெரியுமா, நான் ஆங்கிலத்தில் எழுதுவதை தொடர்ந்ததும் ஆட்சியில் உள்ள அரசாங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இருதரப்பினரையும் விமர்சனம் செய்ய ஆரம்பித்தேன்.
புலிகள் என்னை தமிழின துரோகி என அவதூறு செய்ய ஆரம்பித்தார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ விரோதி என முத்திரை இடப்பட்ட போதிலும் நான் எனது ஊடகவியலைத் தொடரலானேன்.
புதிய மில்லியனியம் எனக்கு ஒரு ஆச்சரியத்தை கொண்டுவந்தது. தமிழ் கத்தோலிக்க பாதிரியாரான பிதா. எஸ்.ஜே இமானுவல் 2000 ஆண்டு மத்தியில் ரொரான்ரோ வந்தார், மற்றும் என்னையும் தொடர்பு கொண்டார்.
அவர் லண்டனில் உள்ள பாலசிங்கம் என்னுடன் பேச விரும்புவதாகவும் சொன்னார்.
இது பாலசிங்கத்துடன் திரும்பவும் தொடர்புகளை நிறுவிக்கொள்ள எனக்கு வழியேற்படுத்தியது. அவரை நான் முதலில் சென்னையில் 1985ல் முதன்முதலாகச் சந்தித்து ‘த ஐலன்ட் பத்திரிகைக்காகவும் தமிழ் நாட்டிலுள்ள த புரொன்ட் லைன் சஞ்சிகைக்காகவும் நேர்காணல் செய்தபோதுதான்
பத்திரிகையாசிரியர் லசந்த விக்கிரமதுங்க
பாலசிங்கத்துடன் தொடர்பு கொண்ட அதேவேளை தமிழ் மக்கள் போரை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம் மற்றும் ஒரு பேச்சு வார்த்தை மூலமான தீர்வின் வழியாக சமாதானத்தை தழுவவேண்டியது அவசியம் என்கிற எனது கருத்தை தான் ஏற்றுக்கொள்வதாக அவர் என்னிடம் சொன்னார்.
மேலும் தான் நோர்வே யின் உதவியுடன் ஒரு சமாதான நடவடிக்கைக்காக வேலை செய்து வருவதாகவும் மற்றும் அதற்கு நான் என் எழுத்துக்கள் மூலமாக ஆதரவளிக்க வேண்டும் என்றும் பாலா அண்ணை கேட்டுக் கொண்டார்.
அப்போது நான் “சண்டே லீடர்” பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தேன்.
நான் அதன் ஆசிரியரும் மற்றும் எனது நெருங்கிய நண்பருமான லசந்த விக்கிரமதுங்காவுக்கு அதைப்பற்றி அறிவித்தபோது, அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததோடு, வெற்றிகரமான சமாதானத்தை கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் தங்கள் பத்திரிகை பின்துணை நல்கும் என்றும் தெரிவித்தார்.
அதன்பின் பாலசிங்கத்துடன் ஒழுங்கான தொடர்புகளை மேற்கொண்டு வந்தேன். நாங்கள் பல சந்தர்ப்பங்களில் பேசி உரையாடல்களை பதிவு செய்த பின்பு அதற்குத் தொடர்பு இல்லாத விடயங்களை பற்றி மணிக்கணக்காக பேசியுள்ளோம்.
எல்.ரீ.ரீ.ஈயின் உள்ளக வேலைகளைப்பற்றியும் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் அந்த உரையாடல்கள் மூலமாக நான் ஏராளமானவற்றை அறிந்து கொண்டேன்.
ஒஸ்லோவின் அனுசரணையுடனான யுத்த நிறுத்தம் 2002 பெப்ரவரி 23ல் நடைமுறைக்கு வந்தது.
ஆரம்பத்தில் நான் மிகவும் மகிழ்சி அடைந்தேன்.
விரைவிலேயே ஒரு நேர்மையான அமைதித் தீர்வுக்கு உகந்ததாக இல்லாத வகையில் எல்.ரீ.ரீ.ஈ நடப்பதை நான் கண்டுகொண்டேன்.
இதைப்பற்றி நான் பாலசிங்கத்திடம் ஆட்சேபணைகளை எழுப்பிய வேளைகளில் எனது புகார்களுக்கு அவர் பதிலளிக்காமல் இருப்பதை நான் கண்டேன்.
மெதுவாக அவர் என்னை தவிர்க்க ஆரம்பித்தார்.
ஒரு சமாதான நடவடிக்கைக்கு பழக்கமாகி வருவதற்கு எல்.ரீ.ரீ.ஈ க்கு சிறிது கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று எண்ணி ஆறுமாதங்கள் வரை நான் காத்திருந்தேன்.
அது நடக்கவேயில்லை, எல்.ரீ.ரீ.ஈயின் எதிர்மறையான செயல்பாடுகளின் குறை நிறைகளைப்பற்றி நான் விமர்சிக்க ஆரம்பித்தேன்.
விரைவிலேயே சமாதானப் பேச்சுக்களில் எல்.ரீ.ரீ.ஈ நேர்மையாக இல்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அந்த சிந்தனைகள் எனது பத்திகளில் பிரதிபலிக்க ஆரம்பித்தன.
பாலசிங்கம் மிகவும் கோபமடைந்தார். அவர் எனது பத்திகளை தொடரவேண்டாம் ஏனென்றால் தமிழ் வாசகர்கள் மத்தியில் பத்திரிகையின் நிலைப்பாட்டை அது பாதிக்கும் என அவர் லசந்தவுக்கு ஆலோசனைகள் சொன்னார்.
இதை என்னிடம் தெரிவித்த லசந்த, “வழக்கப்படி தொடருங்கள்”; என என்னிடம் சொன்னார். நான் தொடர்ந்தேன். பின்னர் பாலசிங்கம் பத்திரிகை மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் எனது பெயர்கூறி தாக்கத் தொடங்கினார்.
எங்களிடையேயான சகல தொடர்பாடல்களும் நிறுத்தப்பட்டன.
அப்படியான ஒரு பின்னணியில் அவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு கிடைத்தது உண்மையில் ஒரு ஆச்சரியமே.
அந்த உரையாடலின் ஊடாக அவர் எனக்கு விளக்கியது, உண்மையில் தான் ஒரு பேச்சு வார்த்தை மூலமான தீர்வுக்கு உண்மையிலேயே நேர்மையாக நடந்துகொண்டதாகவும் ஆனால் பிரபாகரன் அதை நிராகரித்து விட்டதால் நிலமை கட்டுமீறிப் போய்விட்டது என்று.
நீங்கள் ஏன் என்னை பகிரங்கமாக தாக்கினீர்கள் என்றோ அல்லது சண்டே லீடரில் நான் எழுதுவதை தடுத்து நிறுத்த முயற்சித்தீர்கள் என்றோ அவரிடம் கேட்கவில்லை.
இறந்து கொண்டிருக்கும் ஒரு மனிதரிடம் அப்படி அதைச் செய்யக்கூடாது என்று நான் நினைத்தேன்.
எனினும் எல்.ரீ.ரீ.ஈக்குள் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் அவர் பகிரங்கமாக எனக்கு எதிராக திருப்பி விட நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
தமிழ்செல்வன் மற்றும் கஸ்ட்ரோ ஆகியோர் எனக்கு எதிராக வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈக்குள் அந்த நேரத்தில் என்னைப் பற்றிய விஷமப் பிரச்சாரங்களை நடத்தி வந்தார்கள்.
மற்றும் ஆரம்ப நாட்களில் பாலசிங்கம் என்னுடன் நெருங்கிய தொடர்பை பராமரித்து வந்ததின் காரணமாக அதைச் செய்யமுடியாத பலவீனமான நிலையில் பாலசிங்கம் இருந்திருக்க கூடியது சாத்தியமே.
பாலசிங்கத்தின் தொலைபேசி அழைப்புக்குச் சில நாட்களின் பின்னர் , எல்.ரீ.ரீ.ஈயின் சிந்தனாவாதியும் மற்றும் அரசியல் ஆலோசகருமான பாலசிங்கம் தனது ஆரோக்கிய நிலை பற்றிய ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டார்.
நவம்பர் 22, 2006ல் வெளியான அந்த அறிக்கையில் பாலசிங்கம் சொல்லியிருந்தது “அது துரதிருஷ்டவசமான ஒரு தனிப்பட்ட துயரம். எனினும் எனது மக்கள் கூட்டாக எதிர்கொண்ட பரந்த சமுத்திரம் போன்ற துயரத்தின் முன்னால் எனது சுகவீனம் வெறும் ஒரு கூழாங்கல்லைப் போன்றதூன்.
இந்த சுகவீனத்தால் நான் முடமாக்கப் பட்டுள்ளேன், எனது மக்கள் எதிர்கொள்ளும் பாரிய துன்பங்கள் மற்றும் அடக்குமுறைகளை அழிப்பதற்குரிய கணிசமான பங்களிப்பை வழங்க இயலாதவனாக உள்ளேன்” என்று.
அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கம், டிசம்பர் 14, வியாழன் அன்று தெற்கு லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து லண்டன் நேரம் பி.ப 1.45 க்கு அமைதியாக உயிர்நீத்தார்.
68 வயதான தமிழ் தலைவர் தனது கடைசி மூச்சை விட்டபொழுது, அவுஸ்திரேலியாவில் பிறந்த அவரது பிரியமானதும் மற்றும் விசுவாசமுள்ளதுமான மனைவி அடேல் ஆன் அவரது பக்கத்திலேயே இருந்தார்.
அவரது மறைவுக்குப் பின்னர் அவருக்கு ‘தேசத்தின் குரல்’ என்கிற பட்டத்தை வழங்கி புலிகளின் தலைவர் வேலப்பிள்ளை பிரபாகரன் அவரைக் கௌரவித்தார்.
(தொடரும்)
– டி.பி.எஸ்.ஜெயராஜ்
(flash back: அன்ரன் பாலசிங்கத்தின் 10வது நினைவுதினத்தை முன்னிட்டு ஊடகவியளாளர் – டி.பி.எஸ்.ஜெயராஜால் எழுதப்பட்ட கட்டுரை மீள்பிரசுரிக்கப்படுகிறது. )