சர்க்கரை ஆலைகளில் இருந்து வருகின்ற மணம், டெல்லியின் 360 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற ஷாஜகான்பூருக்கு நான் வந்தடைந்து விட்டதை உணர்த்தியது.
காகோரி கான்ட் ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் அஷ்ஃபாகுல்லா கான் போன்ற கதாநாயகர்கள் தோன்றிய புரட்சியாளர்களின் நகரமாக விளங்குகிற ஷாஜகான்பூர் அச்சமின்றியும், வீரத்தோடும் திகழ்ந்து வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நீண்ட போராட்டத்தில் ஆசாராமுக்கு எதிரான போராடியபோது, பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குடும்பமும் தங்களின் வீரத்தையும், அச்சமில்லாத பண்பையும் வெளிக்காட்டியுள்ளனர்.
அலுவலக விடயமாக இந்த குடும்பத்தினரை நான் சந்திப்பது இது மூன்றாவது முறை.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு போலீஸ் காவல்
இந்த வழக்கு விசாரணை தொடங்கியதில் இருந்து, போலீஸ் காவல் நிலை ஒன்று இவர்களின் வீட்டுக்கு அருகில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காவல் நிலையில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் என்னுடைய பெயரையும் முகவரியையும் எழுதி வைத்துவிட்டு, நான் வீட்டின் கலைக்கூடத்திற்குள் நுழைந்தேன்.
வீட்டிற்கு வெளியே 3 டிரக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த டிரக்குகளில் சூரத்திற்கு அனுப்படுவதற்காக சேலைகள் ஏற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் தெரிவித்தார்.
“இது சேலைகள் அதிகமாக விற்கிற காலம். எனவேதான் இந்த வேலை நடைபெறுகிறது. மற்றபடி இந்த வியாபாரம் மிகவும் குறைந்துவிட்டது” என்று அவர் கூறினார்.
வீட்டின் கலைக்கூடத்திலுள்ள அலுவலகத்தில் குர்தா-பைஜாமா அணிந்திருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பொருட்களை அனுப்புவதற்கு தொடர்புடைய ஆவணங்களில் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தார்.
நான் அங்கு நுழைந்தவுடன், சில ஊடக நபர்களின் அணுகுமுறை பற்றி தன்னுடைய கவலையை தந்தை தெரிவித்தார்.
ஊடகங்கள் புறக்கணிப்பு
“நாங்கள் ஜோத்பூரில் இருந்தபோது யாரும் எங்களிடம் வரவில்லை. விசாரணை முடிவடைந்தது. ஊடக நபர்கள் யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை.
ஆசாராம் ஆதரவாளர்களின் அறிக்கைகளை பல செய்தித்தாள்கள் வெளியிட்டன. எங்களுடைய கருத்தையும் பதிவு செய்து வெளியிட வேண்டினோம். யாரும் எங்களுக்கு செவிமடுக்கவில்லை. இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு பின்னர் அனைவரும் எங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்” என்று அவர் கூறினார்.
பத்திரிகையாளர்கள் அடிக்கடி வருவதை தவிர்க்க விரும்பிய அவர், அவருடைய மூத்த மகனோடு முதல் மாடியிலுள்ள அறையில் காத்திருக்குமாறு அவர் என்னை அனுப்பினார்.
வெளியான தனிப்பட்ட தகவல்கள்
மிகவும் கட்டுபாடான சட்டங்கள் இருந்தாலும், தங்களுடைய வீட்டை முழுமையாக ஊடக நிறுவனங்கள் தொலைக்காட்சியில் காட்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கூறினார்.
இது தொடர்பாக கவலை தெரிவித்த அவர், “இதனால் எங்களுடைய ஆபத்து அதிகரித்துள்ளது. ஆசாராமுக்கு எதிராக வழக்கு தொடுத்த இந்த குடும்பம் எங்கு தங்கியுள்ளது என்பது இன்று இந்த நகரம் முழுவதுக்கும் தெரியும்.
இந்த மாநகர சந்தைக்கு சென்று எந்தவொரு குழந்தையிடமும் கேட்டு பாருங்கள், அவர் எங்களுடைய வீட்டுக்கு உங்களை நேராக அழைத்து வருவார். எங்களுடைய இயல்பு வாழ்க்கை முன்னரே முடிவுக்கு வந்துவிட்டது” என்று அவர் கூறினார்.
சுமார் 40 நிமிடங்களுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குளிர்ந்த பானத்தோடும், பிஸ்கட்டோடும் அறைக்குள் வந்தார்.
கோடையாக இருப்பதால்? குளிர்பானத்தை குடிக்க அவர் வலியுறுத்தினார்.
பலவீனமடைய செய்த நீண்ட போராட்டம்
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையான இவரது 5 ஆண்டுகளுக்கு முந்தைய தோற்றத்தை நான் நினைவு கூர்ந்தேன். அவர் மிகவும் பலவீனமாக காணப்பட்டார்.
தலையில் ஓரளவு வழுக்கை விழுந்து, இந்த நீண்டதொரு போராட்டத்தில் அவரது உடல் எடையில் அவர் பாதியாக குறைந்து விட்டதைப்போல தோன்றினார்.
வார்த்தைகளால் விளக்க முடியாத வலிகள்
விசாரணை நேரத்தை நினைவுகூர்ந்த அவர், “வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பல வலிகளை நாங்கள் எதிர்கொண்டோம். நான் விளக்க முடியாத அளவுக்கு மன மற்றும் உடல் ரீதியான தொந்தரவுகளை சந்தித்தோம். அந்த நேரத்தில் வியாபாரமும் முற்றிலும் நின்றுபோனது.
கடந்த 5 ஆண்டுகளில் எப்போது முழு திருப்தியோடு உணவு உண்டேன் என்று எனக்கு தெரியாது. பசி எடுகின்ற உணர்வை இழந்துவிட்டேன். தூக்கம் இல்லாமல் இரவுகளை கழித்திருக்கிறேன். நள்ளிரவு வேளைகளில் திடீரென நான் எழுந்துவிடுவதுண்டு.
கடந்த 5 ஆண்டுகளாக நான் எனக்காக எந்தவொரு ஆடையும் வாங்காத அளவுக்கு அதிக ஆபத்து என்னுடைய வாழ்க்கையில் நிறைந்திருந்தது. சந்தையிலிருந்து காய்கறி, பழங்களை நான் வாங்கியதில்லை.
பல இடங்களை சுற்றி வருவதை விட்டுவிடுங்கள் நான் உடல் நலமின்றி இருந்தபோதுகூட, மருத்துவரை வீட்டுக்கு வர சொல்லி சிகிச்சை பெறுவதே வழக்கமாக இருந்தது. எங்களுடைய வீட்டிலேயே முடங்கிபோய், நாங்கள் கைதிகளாக இருந்தோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
தீர்ப்பால் மகிழ்ச்சி
அவர் தொடர்ந்து பேசுகையில், ஆசாராமுக்கு எதிராக வழக்குத் தொடுத்த நாளில், கவலையால் வீட்டிலுள்ள யாருமே சாப்பிடவில்லை. ஏப்ரல் 25ம் தேதி வழக்கில் நாங்கள் வென்றபோது அடைந்த மகிழ்ச்சியால் யாரும் சாப்பிடவில்லை. எங்களால் சாப்பிட முடியவில்லை.
அடுத்த நாள்தான், பல ஆண்டுகளுக்கு பின்னர் திருப்தியாக உணவு உட்கொண்டோம். இந்த தீர்ப்புக்கு பின்னர், நாங்கள் எல்லாரும் சரியாக தூங்கத் தொடங்கியுள்ளோம்.
சூரிய உதயத்திற்கு பிறகு நேற்றைய தினம் எழுந்தேன். எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு அதிகமாக தூங்கி எழுந்துள்ளேன் என்று எனக்கு நினைவில்லை என்று குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பதின்ம வயது பெண்
2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசாராமுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயது 16தான். இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்பு பற்றி குறிப்பிட்டபோது, அவருடைய தந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
என்னுடைய குழந்தையின் எல்லா கனவுகளும் சிதறடிக்கப்பட்டுவிட்டன.
ஐஏஎஸ் படிக்க அவர் விரும்பினார். அவருடைய படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
2013ம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த ஆண்டு முழுவதும் அதனால் பாதிக்கப்பட்டது.
2014ம் ஆண்டு முழுவதும் சாட்சியம் வழங்குவதிலேயே அவர் ஈடுபட்டிருந்தார். இவ்வாறே இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
இப்போது அவருடைய வாழ்க்கையை ஓரளவு கையாளும் நிலை உருவாகியுள்ளது. பி.ஏ படித்து வரும் அவர், தற்போது இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதியுள்ளார்.
இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், பெரியதொரு பிரச்சனைக்கு பின்னரும் எவ்வாறு ஒரு குழந்தை படிக்க முடியும்?
ஆனால், எனது மகள் தேர்வுகளில் முதல்நிலையில் வெற்றிபெற்றுள்ளார். 85 சதவீத மதிப்பெண்களை அவர் பெற்றிருக்கிறார்.
இப்போது நான் சென்றாலும், அவர் படித்து கொண்டிருப்பதைதான் பார்க்க முடியும் என்று அவர் கூறினார்.
கொலை அச்சுறுத்தல்
வழக்கை திரும்ப பெற்றுவிட்டால் பணம் அளிப்பதாக தெரிவித்ததோடு, தன்னை கொலை செய்துவிடுவதாக ஆசாராம் வெளிப்படையாக அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட இந்த பெண்ணின் தந்தை தெரிவிக்கிறார்.
“விசாரணை நடைபெற்று வந்தபோது, ஆசாராமின் சிகிக்காரா என்ற பெயருடைய கூலியாள் ஒருவர் என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார்,
காவலுக்கு இருந்த போலீசிடம், பொருட்களை முன்பதிவு செய்ய வந்துள்ளதாக அவர் கூறியிருந்தார். அவரோடு ஆயுதம் தாங்கிய இன்னொருவரும் வந்திருந்தார்.
என்னுடைய இருக்கையில் வேலை செய்து கொண்டிருந்த நான், அவரை பார்த்ததும், உடனடியாக இனம் கண்டு கொண்டேன்.
ஆசாராமின் பரிவாரங்களோடு அவன் இருந்ததை நாள் முன்னதாக பார்த்திருக்கிறேன்.
அந்த சமயம்தமான் கொலைகளுக்கான சாட்சியங்கள் தொடங்கியிருந்தன. எனவே நான் எச்சரிக்கை அடைந்தேன்.
இந்த வழக்கை திரும்ப பெற்றுவிட்டால், நான் விரும்புகிற பணத்தை பெற்று கொள்ளலாம் என்றும், இல்லாவிட்டால் கொல்லப்படுவேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்” என்று தந்தை விளக்கினார்.
அன்றைய நாள் என்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்த வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறினேன். இந்த விஷயம் ஆசாராமை சென்றடைந்திருக்க வேண்டும்.
விசாரணை நடைபெற்ற நாளில், நீதிமன்றத்தில் நான் என்னுடைய உண்மையான சாட்சியத்தை வழங்கியபோது, ஆசாராம் அதிர்ச்சியடைந்துவிட்டார்.
நீதிமன்றத்தைவிட்டு வெளியேறியபோது, தன்னுடைய இரு கரங்களின் இரண்டு விரல்களை அசைத்து கொண்டே ஆசாராம் சென்றார்.
இந்த மனிதன் கொல்லப்பட வேண்டும் என்பதை அவருடைய அந்த சைகை குறிப்புணர்த்துவதாக, தன்னுடைய சார்பாக வாதிட்ட இளைய வழக்குரைஞர் ஒருவர் தெரிவித்தாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குறிப்பிட்டார்.
சாட்சிகள் கொலை மற்றும் மிரட்டல்
சாட்சியம் அளித்த அனைவரும் ஏற்கெனவே கொல்லப்ட்டிருந்தனர். இவ்வாறுதான் அவர் வெளிப்படையாக எங்களுக்கு மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார். தாங்கள் அமைதியாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் இதுவரை 9 சாட்சிகள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவரை இன்னும் காணவில்லை. தந்தையோடு சேர்த்து, மகளும் மிரட்டப்பட்டுள்ளார்.
என்னுடைய மகள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தபோது, அவளுடைய முன்னால் அமர்ந்திருந்த ஆசாராம் வினோத, வித்தியாசமான குரல்கள் எழுப்பி அவளை மிரட்டினார். எங்களுடைய வழக்குரைஞர் நீதிபதியிடம் சென்று இது பற்றி புகார் அளிப்பார். அவரை அமைதி காக்க செய்ய நீதிபதி போலீசுக்கு ஆணையிட வேண்டியிருந்தது. இது ஒவ்வொரு அமர்விலும் நடந்தது.
சவாலாக அமைந்த வழக்கு நடைபெற்ற இடம்
இந்த விசாரணையின்போது, ஷாஜகான்பூரில் இருந்து, ஏறக்குறைய 1000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜோத்பூருக்கு செல்வதே பாதிக்கப்பட்ட இந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு சவாலாகவே இருந்துள்ளது.
இந்த வழக்கில் தன்னுடைய மகளின் சாட்சியம் மட்டுமே மூன்றரை மாதங்களாக நடைபெற்றதாவும், அவருடைய மனைவியும், பாதிக்கப்பட்டவரின் தாயுமானவரின் சாட்சியம் ஒன்றரை மாதம் நடைபெற்றதாகவும் தந்தை விளக்கினார்.
இந்த காலத்தில், எந்தெந்த வழிகளில் எல்லாம் ஜோத்பூருக்கு செல்ல முடிந்ததோ, சில நேரங்களில் பேருந்து அல்லது ரயில், அதிலும் சில வேளைகளில் ஸ்லீப்பர் வகுப்பு அல்லது பொது வகுப்புகளில் அவர்கள் பயணித்துள்ளனர்.
விசாரண ஒரு நாள் முழுவதும் நடைபெறும். சிலவேளை 10 நிமிடங்களில் நிறைவு பெற்றுவிடும். அந்த நாள் முழுவதும் நாங்கள் என்ன செய்வது, ஹோட்டலில் நாள் முழுவதும் தங்குவோம்.
இந்நிலையில், நீதிமன்றத்தின் விடுமுறை தொடங்கிவிடும். உடைமைகளை இவ்வளவு தொலைவான இடத்திற்கு ஏன் கொண்டு செல்கிறோம் என்று எங்களுக்கே புரியவில்லை.
வழக்கு நடைபெறுகிற ஜோத்பூரில் எங்களுக்கு தெரிந்தவர்களோ, வீடோ இருக்கவில்லை” என்று ஆதங்கத்தோடு அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய பெற்றோரோடு விசாரணைக்காக ஜோத்பூருக்கு செல்கிறபோது, அவரது இரு சகோதரர்களும் ஷாஜகான்பூரில் தங்கியிருப்பர்.
பொருளாதார பாதிப்பு
நீண்ட நாட்களாக வீட்டில் இல்லாமல் இருந்ததால், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் வியாபாரம் வீழ்ச்சியடைய தொடங்கியது.
ஒரு சமயத்தில் வேலைகள் எதுவும் இல்லாத நிலையை அடைந்ததாக அவர் கூறினார்.
விசாரணை மற்றும் வீட்டு செலவுகளை சந்திக்க தன்னுடைய டிரக்குகளை அவர் விற்க வேண்டியதாயிற்று.
“நாங்கள் ஜோத்பூரில் இருக்கும்போது, ஷாஜகான்பூரிலுள்ள எங்களுடைய மகன்களை பற்றி நாங்கள் கவலைப்பட, அவர்கள் எங்களை பற்றி கவலையடைவர். மூத்த மகன் வியாபாரத்தை கையாண்டதோடு, படிப்பையும், இளைய மகனையும் கவனித்து வந்தார்.
ஒருமுறை இளைய மகன் டைபார்ய்டு காய்ச்சலால் துன்புற்றார். நாங்கள் மூவரும் சாட்சயம் அளிக்க ஜோத்பூர் சென்றிருந்ததால், மிகவும் கவலையடைந்தோம். அதுதான் பெரும் துன்பங்கள் சூழ்ந்த தருணமாகும்” என்று தந்தை தெரிவித்தார்.
குற்றம் செய்தவர் தண்ணடனை பெறுவதே நோக்கம்
இத்தகைய கடிமான சூழ்நிலைகளிலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் பாறைபோல உறுதியாக நின்றிருந்தது. குடும்பத்தின் உறுப்பினர் அனைவரும் ஒவ்வொருவரை பற்றியும் மிகவும் கவலையோடு இருந்ததாக தந்தை விளக்குகிறார்.
பிள்ளைகள் மீது யாரும் தாக்குதல் நடத்திவிடக்கூடாது என்று பெற்றோரும், தங்களின் பெற்றோருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பிள்ளைகளும் மாறிமாறி கவலையடைந்திருந்தனர்.
ஆசாராமை அவர் செய்த தவறுக்காக தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பயத்தின் நிழலிலேயே இந்த குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தது.
தண்டிக்கும் சமூகம்
மிகவும் செல்வாக்கு மிகுந்த ஆசாராம் போன்ற நபர் ஒருவரை சிறைக்கு அனுப்புவதற்கு மேற்கொண்ட இந்த நீண்ட போராட்டத்திற்கு பின்னரும், இந்த சமூதாயம் அவர்களை தோல்வியடைய செய்துள்ளது.
தன்னுடைய பிள்ளைகளைத் திருமணம் செய்துகொள்ள யாரும் தாயராக இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவிக்கிறார்.
தந்தை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “என்னுடைய மூத்த மகன் 25 வயதானவன். மகளுக்கும் 21 வயதாகிறது. இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயல்கிறேன். ஆனால், யாரும் அதற்கு தயாராக இல்லை.
என்னுடைய மகளின் திருமணத்திற்காக இரண்டு, மூன்று குடும்பத்தினரிடம் திருமண முன்மொழிவொடு சென்றேன். என்னுடைய மகள் மிகவும் நம்பிக்கைக்குரியவள். எங்களோடு சம்மந்தம் வைத்து கொள்ளுங்கள்” என்று கேட்டேன்.
ஆனால், இந்த வழக்கு பற்றி கேள்விப்பட்டவுடன் சிலர் அச்சத்தால் வேண்டாம் என்று தெரிவித்துவிட்டனர். உங்களுடைய மகள் மீது சமூக கறை ஒன்று உள்ளது என்று சிலர் கூறிவிட்டனர்.
கண்களில் கண்ணீரோடும், கல் போன்ற முகத்தோடும் அவர் தொடர்ந்து பேசியபோது, நீங்கள் விரும்புகிற வார்த்தைகளில் இதனை எழுதி கொள்ளுங்கள். என்னுடைய மகளிடம் சமூக கறை ஒன்று உள்ளது. அதனால், திருமணம் செய்ய முடியாது என்று அவர் கூறினார்.
என்னுடைய மகனுக்கும் வயது ஏறிக்கொண்டே செல்கிறது. அவனையும் திருமணம் செய்துகொள்ள யாரும் தயாராக இல்லை.
மக்கள் எங்களை பார்க்க வருகின்றபோது, வெளியே இருக்கின்ற போலீஸ் நிலையை பார்த்து அஞ்சுகின்றனர். உங்களுடைய மகன் எப்போது வேண்டுமானலும், தாக்கப்படலாம். அப்படியானால் என்னுடைய மகளுக்கு என்னவாகும்? என்று ஒரு குடும்பம் கூறியது.
என்னுடைய மகளுக்கு வருகின்ற வரன் எல்லாம் அதிக வயதுடைய ஆண்கள் அல்லது மனைவியை இழந்தோராக உள்ளனர். நான் ஏன் அவர்களுக்கு என்னுடைய மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும்?
முதலில், வழக்கு விசாரணை 1,000 கிலோமீட்டருக்கு அப்பால் நடைபெற்றது. வியாபாரத்தில் வீழ்ச்சி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல், தற்போது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் என பிரச்சனைகள் இன்னும் தொடர்கின்றன.
நான் புறப்படுவதற்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இவ்வாறு தெரிவித்தார்.
“அசாராம் தன்னுடைய வலையை சுற்றி எங்களை முடக்க முயற்சித்தார். இவற்றை நாங்கள் எவ்வாறு பொறுத்து கொண்டோம் என்பதை நாங்களே அறிவோம். இத்தகைய கவலைகளால்தான் நான் என்னுடைய உடல் எடையை இழந்து வருகிறேன்”
(ஷாஜகான்பூரில் ஆசாராம் சாமியாரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வலிகள் பற்றி பிபிசி செய்தியாளர் களத்தில் இருந்து பதிவு செய்த அறிக்கை.)