சட்டத்தரணிகள் பற்றுச்சீட்டு வழங்காவிட்டால் அது ஓர் குற்றமாகும் என சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சீ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள சட்டத்தரணிகள் சங்க தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், சட்டத்தரணிகள் சமூகத்தை வரிச் செலுத்துவதற்கு ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நான் உள்ளிட்ட சட்டத்தரணிகள் தற்பொழுது வரிச் செலுத்தி வருகின்றோம்.
வருமான விபரங்களை பேணி வரிச் செலுத்துவது குறித்து சட்டத்தரணிகளை தெளிவுபடுத்த உள்ளோம்.
சட்ட சேவை பெற்றுக் கொள்ளும் சேவை பெறுனர் பற்றுச்சீட்டு கேட்டால் அதனை வழங்க வேண்டியது சட்டத்தரணியின் கடமையாகும். அவ்வாறு வழங்க மறுப்பது பிழையானது.
பற்றுச்சீட்டு வழங்காத சட்டத்தரணிகள் குறித்து சட்டத் தரணிகள் சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட முடியும். அவ்வாறான சட்டத்தரணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் என சீ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.