அண்மையில் வெளியான க.பொ. த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்றோர் இல்லத்தைச் சேர்ந்த மாணவி லோகேஸ்வரி ஜெயராசன் 3 ஏ, 3 பி, சி, 2 எஸ் சித்திபெற்றுச் சித்தியடைந்துள்ளார்.யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவியின் இரு கண்களும் பார்வை இழந்துள்ளதுடன், உடல் ரீதியாக வேறு சில உபாதைகளுக்கும் உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவியை ஒன்பது வயது வரை அவரது பெற்றோர் பாடசாலைக்கு அனுப்பி விட்டுப் பின்னர் அவரது உடல் நிலைமையைக் கருத்தில் கொண்டு பாடசாலைக்கு அனுப்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.இதன் பின்னர் சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்றோர் இல்லத் தலைவர் ஆ. ரவீந்திரன் எடுத்த கடும் முயற்சியின் பலனாக குறித்த இல்லத்தில் இணைக்கப்பட்டார். தற்போது சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் குறித்த மாணவி கல்வி பயின்று வருகிறார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற க. பொ.த சாதாரணப் பரீட்சைக்கு மேற்படி மாணவி தோற்றினார். மாணவியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஒலிப்பதிவு முறை மூலம் பரீட்சையில் தோற்ற அனுமதிக்கப்பட்டார். இந்நிலையிலேயே குறித்த மாணவி மேற்படி பெறுபேற்றைப் பெற்றுள்ளார்.குறித்த மாணவி கருத்துத் தெரிவிக்கும் போது;
”எங்கட அம்மா, அப்பா ஒன்பது வயது வரை என்னைப் பள்ளிக்கூடத்திற்கு விட்டுவிட்டு வைச்சிருந்தவை. படிக்க ஒன்றும் விடேல. ஒன்பது வயசில எங்கட சேரும், ரீச்சரும் கூட்டிக் கொண்டு வந்து என்னைப் படிப்பிச்சவை. இவ்வளவு நாளும் எனக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து தருகினம்.
நான் சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முன்னர் திடீரென என் கைகள் வீக்கமடைந்து எழுத முடியாத நிலையேற்பட்டது. இதனையடுத்து எங்களுடைய ரவீந்திரன் சேர் கொழும்பு கல்வியமைச்சின் உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கலந்துரையாடியதையடுத்து ஒலிப்பதிவு மூலம் பரீட்சை எழுதுவதற்கு எனக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறான நிலையில் சிறந்த பெறுபேறு கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது.
வாழ்வகத்தில் கற்பித்த ரவீந்திரன் சேர், மோகன வதனி ரீச்சர், நிரோஷனா ரீச்சர், ஜீவனா ரீச்சர், கிளாரா ரீச்சர் ஆகியோருடன் பாடசாலையில் கற்பித்த பரிமளா ரீச்சர், ராதி ரீச்சர், வினோதினி ரீச்சர், கிருஸ்ணமூர்த்தி ரீச்சர், ஜெயாழினி ரீச்சர் ஆகியோருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி கூறுகின்றேன்.
நான் தொடர்ந்தும் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்தி க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்றுக் கொள்வேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. எதிர்காலத்தில ஒரு ஆசிரியையாக உருவாகி என் போன்ற ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி கற்பிப்பேன் என உறுதியளிக்கின்றேன்” என்றார்.
மன உறுதி மாத்திரம் எம்மிடம் இருந்துவிட்டால் உடல் ஊனம் என்பது ஒரு பொருட்டே அல்ல என்பதற்கு மேற்படி மாணவி நல்லதொரு முன்னுதாரணம். மாணவியின் வெற்றிப் பயணம் தொடர நாமும் வாழ்த்துவோம்.