“சில்லென்று கொட்டும் தண்ணீர்… சுடச்சுட வறுத்த மீன்!”

தண்ணீர்

Erode: 

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கூட பேட்ஸ்மேன்கள் இந்தளவுக்கு ஆக்ரோஷமான சதங்களை அடித்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு கோடைக்காலம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தினமும் 100 டிகிரிக்கு மேல்வெயிலை அள்ளி வீசுகிறது. வெயிலுக்குப் பயந்து பலர் வீட்டிலே முடங்கிக் கிடக்கின்றனர். ஒருசிலர் வெயிலின் கொடுமை தாங்காமல் ஊட்டி, கொடைக்கானல் என குளிர்ப் பிரதேசங்களை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர். அப்படிச் செல்பவர்கள் ஏழைக்கேற்ற எள்ளுருண்டையான கொடிவேரியைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்.

தண்ணீர்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கொடிவேரி. கொடிவேரி பிரிவு சாலையில் இறங்கி வெறும் ரெண்டே கி.மீ காலார நடந்தால், சில்லென்ற சாரல் காற்றுடன் கொடிவேரி உங்களை வரவேற்கும். (என்கிட்ட தான் கார் இருக்கே!…நான் ஏன் நடக்கணும் எனக் கேட்பவர்கள்… காருக்கு டோக்கன் பாஸ் போட்டுவிட்டு நேராக கொடிவேரியில் நீங்கள் இறங்கலாம்). கொடிவேரி அணைக்குள் நுழைய ஆள் ஒன்றுக்கு வெறும் 5 ரூபாய்தான் நுழைவுக் கட்டணம்.

தண்ணீர்

 

நிற்க!.. இந்த இடத்தில் கொடிவேரி அணைக்கட்டின் வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள். கொடிவேரி அணைக்கட்டு காவிரி ஆற்றின் உபநதியாகிய பவானி ஆற்றின் குறுக்கே, பவானிசாகர் அணைக்கு கீழ்ப்புறம் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணை மைசூர் மன்னர்களால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையின் மொத்த நீளம் 151 மீட்டர்.

இந்த அணையின் இடதுபுறம் அரக்கன்கோட்டை கால்வாயும், வலது புறத்தில் தடப்பள்ளி கால்வாயும் அமைந்துள்ளன. இந்த இரண்டு கால்வாய்கள் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. வருடம் 365 நாள்களும் இந்த அணைக்கட்டின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு, அது குடிநீருக்காகவும், விவசாய நிலங்களுக்கும் செல்கிறது. எனவே, எப்போது வந்தாலும் கொடிவேரியில் ஜாலியாக ஒரு குளியல் போடலாம்.

சரி விஷயத்துக்கு வருவோம். இந்த அணைக்கட்டிலிருந்து வெளியேறும் நீர் சுமார் 20 அடி உயரத்திலிருந்து பொத்தென கீழே விழுவதன் மூலம் ஓர் அழகான நீர் வீழ்ச்சியாய் உருவாகிறது. பார்ப்பதற்கு ஒரு சிறிய அருவி போல் இருந்தாலும், குளிர்ச்சியாய் தலையில் அது கொட்டும்போது சொர்க்கம்தான். தற்போது விவசாயத்துக்காக பவானிசாகர் அணையிலிருந்து 500 க.அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கொடிவேரி அணையில் தண்ணீர் கொட்டோ கொட்டென கொட்டுகிறது. மே மாதம் விடுமுறைக்காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகமாகியுள்ளது.

தண்ணீர்

 

நன்றாக குளியல் போட்டு வந்ததும், சாப்பிடுவதற்கு சுடச்சுட வறுத்த மீன் ரெடியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், சுடு சோற்றில் குழி வெட்டி, அதில் மீன் குழம்பை ஊற்றித் தருகிறார்கள். அணையிலிருந்து கொட்டும் நீரை பார்த்தபடியே மீன் சாப்பாட்டை சாப்பிடும்போது ஆகா… பரம ஆனந்தம். சுமார் 25-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் கொடிவேரியில் இருக்கின்றன. பக்கத்திலிருக்கும் பவானிசாகர் அணையிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள்தான் என்றாலும், உஷாராக இருக்க வேண்டும். ஒருசில கடைகளில் கெட்டுப்போன மீன்கள்தான் சுடச்சுட பறிமாறப்படுகின்றன. மேலும், மாங்காய், நிலக்கடலை, வெள்ளரிக்காய், இலந்தை வடை என சாப்பிடுவதற்கு எக்கச்சக்கமாக பொருள்கள் கிடைக்கின்றன.

குழந்தைகள் விளையாடுவதற்காக பூங்கா, பரிசல் சவாரி என கொடிவேரி ஒரு பக்காவான சுற்றுலாத்தலமாக இருக்கிறது. ஆனால், கொடிவேரியில் தங்குவதற்கான வசதிகள் ஏதும் இல்லை. வந்தால் குளித்து, ரசித்துவிட்டுச் செல்லலாம் அவ்வளவுதான்… அந்தவகையில், கொடிவேரி ஒருநாள் டூரிஸ்ட் ஸ்டாட் தான். மேலும், கொடிவேரியில் மீன் கடைகளைத் தவிர்த்து சாப்பாட்டுக் கடைகள் என்று எதுவும் இல்லை. எனவே, முன்னெச்சரிக்கையாக வீட்டிலிருந்து சாப்பாடு கட்டி எடுத்துவருவது நல்லது. இல்லையென்றால், சாப்பாட்டுக்கு 20 கி.மீ பயணித்து கோபிச்செட்டிபாளையமோ, சத்தியமங்கலமோதான் செல்ல வேண்டும்.

எனக்கு எதுவும் தேவையில்லை. அடிக்குற வெயிலை சமாளிக்க சில்லுனு தண்ணியில விழுந்து கிடந்தா போதும் என நினைப்பவர்கள், உடனே கொடிவேரிக்கு கிளம்பலாம்.