பிரித்தானிய பெண் ஒருவர் தவறுதலாக தனது கணவரின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு இந்தியா சென்ற நிலையில், அங்கிருந்து மீண்டும் அவரை திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.
பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான 55 வயது கீதா மோதா தொழில்முறை பயணமாக கடந்த மாதம் 23 ஆம் திகதி இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளார்.
பயண நாளன்று கீதா தவறுதலாக தனது கணவர் திலிப்பின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு விமான நிலையம் சென்றுள்ளார்.
மான்செஸ்டர் நகர விமான நிலையத்தில் அவர் தவறான பாஸ்போர்ட்டை கொண்டு வந்துள்ளது குறித்து எந்த அதிகாரியும் கண்டறியவில்லை. இதனை அடுத்து, அவர் டெல்லி சென்று இறங்கிய பின்னர் விண்ணப்பம் ஒன்று பூர்த்தி செய்யும் போது, இந்திய அதிகாரிகள் தவறை கண்டறிந்துள்ளனர்.
இதனை அடுத்து, கீதாவை இந்தியாவுக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
அவர் மீண்டும் துபாய் செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். இதன் பின்னர், மான்செஸ்டர் நகரத்தில் இருந்து அவரது பாஸ்போர்ட் வரும் வரை கீதா துபாய் விமான நிலையத்தில் காக்க வைக்கப்பட்டார்.
மான்செஸ்டர் நகரில் இருந்து துபாய் வந்திறங்கிய போது அங்கே அவருக்கு வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான அடையாள அட்டை இருப்பதால் தனது பாஸ்போர்ட்டை காண்பிக்கும் தேவை இருக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே விமான நிறுவனத்தின் கவனக்குறைவே இதற்கு காரணம் என மான்செஸ்டர் விமான நிலைய அதிகாரிகள் சமாளிக்க, தற்போது இது தொடர்பாக விசாரிக்க எமிரேட்ஸ் விமான நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.