வேலைக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

பெண்

சென்னையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண், ரயில் மோதி பரிதாபமாகப் பலியானார்.

சென்னை, பெருங்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரின் மனைவி தெய்வானை. இவர், பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்பரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். பெருங்குடியிலிருந்து சென்னை கடற்கரைக்குச் செல்லும் பறக்கும் மின்சார ரயிலில் வேலைக்குச் செல்ல வீட்டிலிருந்து இன்று காலை புறப்பட்டார். மேம்பாலம் வழியாகச் செல்லாமல் தண்டவாளத்தைக் கடந்துள்ளார்.

அப்போது கடற்கரையிலிருந்து வேளச்சேரியை நோக்கிச் சென்ற மின்சார ரயில் மோதி, தெய்வானை தூக்கி வீசப்பட்டார். ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் ரயில்வே போலீஸார், தெய்வானையின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், “தெய்வானைக்கு ஒரு மகனும் நான்கு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவரின் கணவர் கூலி வேலை செய்துவருகிறார். தெய்வானையின் வருமானத்தில்தான் இந்தக் குடும்பம் இருந்தது” என்றனர்.

ரயில் மோதி தெய்வானை இறந்தத் தகவல் கிடைத்ததும் அப்பகுதியினர் அங்கு திரண்டுவந்தனர். அவரின் சடலைத்தைப் பார்த்து குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் கதறி அழுதது கல்நெஞ்சையையும் உருக்குவதாக இருந்தது.