விந்தணு, கருமுட்டை ஏதுமின்றி வளர்க்கப்பட்ட கரு! ஷாக் கொடுத்த ஆய்வு!

இனப்பெருக்க செல்கள் எதுவுமின்றி இருவகை ஸ்டெம் செல்களை இணைத்து ஆரம்ப நிலைக் கருவை உருவாக்கும் ஆய்வு பிற ஆய்வாளர்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.

ஆனால் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ள ஆய்வாளர்களோ இந்த ஆய்வு வெற்றி பெற்றால் மருத்துவ ஆய்வுகளுக்கு பயன்படும் கருக்களை உருவாக்கலாம் என்று கூறுகின்றனர்.

அது மட்டுமின்றி கரு கர்ப்பப்பைக்குள் பதியாததால் ஏற்படும் குழந்தையின்மை குறித்த ஆய்வுக்கு இந்த ஆய்வு உதவும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது எலிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த ஆய்வு மூன்று ஆண்டுகளுக்குள் இனப்பெருக்க செல்கள் இல்லாமலே புதிய எலிகளை உருவாக்க உதவலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களோ இது மனிதர்களில் பயன்படுத்தப்பட்டால் மனித குளோன்களின் படையே உருவாகி விடும் என்கிறார்கள்.

இன்னும் இருபது ஆண்டுகளில் இந்த ஆய்வின் மூலம் மனிதக் கருவை உருவாக்கலாம் என எச்சரிக்கிறார்கள் அவர்கள்.

Nicholas Rivron என்னும் பிரித்தானிய ஆய்வாளர் ஒருவர் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில், மூன்றாண்டுகளில் ஒரு எலியின் கருவை உருவாக்கலாம் என்றாலும் மனித கருவை உருவாக்க காலங்கள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளார்.

குழந்தையின்மை தொடர்பான ஆய்வுகளுக்கு இந்த கண்டுபிடிப்பு மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார் அவர்.

மனிதனை உருவாக்குவதற்கு இம்முறையைப் பயன்படுத்துவதில் எனக்கு நம்பிக்கையில்லை என்று கூறும் அவர் தர்க்க ரீதியாக இது தவறானது, மட்டுமின்றி ஏற்கனவே இருக்கும் ஒருவரைப் போன்ற பல குளோன்களை இம்முறை உருவாக்கலாம் என்கிறார்.

மனித குளோனிங் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறும் அவரிடம் கருவானது கர்ப்பப்பையில் பதியாமல் தடுப்பது எது என்று கேட்ட போது, அது தனக்கு தெரியவில்லை என்று கூறும் அவர் அடுத்த மூன்றாண்டுகளில் அதைக் கண்டு பிடித்து விடுவோம் என்று நம்புகிறோம் என்கிறார்.