இலங்கையில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயது வித்யாசங்கள் இன்றி பரவி வரும் இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களுக்கு பாதிப்பு அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிலர் சர்க்கரை நோய் இருப்பது அறியாமல் பார்வையை இழக்கிறார்கள் என்றால் இன்னும் சிலரோ அறியாமையால் பார்வையை இழக்க நேரிடுகிறது.
இன்ஸுலின் :
மனித உடல் இயக்கத்திற்கு மிக முக்கியமானது இன்சுலின். இதுதான் ரத்தத்தில் கலந்து, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நமது உடல் சீராக இயங்க துணைபுரிகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இன்சுலினை, கணையம் என்ற உறுப்பு சுரக்கிறது.
கணையம் பாதிக்கப்பட்டால் இன்சுலின் உற்பத்தி குறைந்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வரும்.
தேவைப்படும் கொழுப்பு :
உடலில் இன்சுலின் நன்றாக வேலை செய்ய, ‘ரிசெப்ட்ராஸ்’ என்ற கொழுப்பு திசுவின் உதவி தேவைப்படும்.
உடல் குண்டாக இருந்தாலோ, உடற்பயிற்சியே செய்யாமல் இருந்தாலோ ரிசெப்ட்ராஸ் சரிவர வேலை செய்யாது. அப்போது கணையம் இன்சுலினை உற்பத்தி செய்தாலும், அது பயன்பாட்டிற்கு வராது. அதனால் காலப் போக்கில் இன்சுலின் சுரப்பதை கணையம் குறைத்துவிடும். அதனாலும் சர்க்கரை நோய் தோன்றும்.
சுரப்பிகள் :
தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன்கள் சமச்சீரில்லாமல் போனாலும், கிட்னியின் மேல் பகுதியில் இருக்கும் ‘அட்டிரினல்’ சுரப்பி அதிகம் சுரந்தாலும், மூளையில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து ‘குரோத் ஹார்மோன்’ அதிகம் சுரந்தாலும் சர்க்கரை நோய் தோன்றும்.
டயாபட்டிக் ரெட்டினோபதி :
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 100 பேரில் 18 பேருக்கு ‘டயாபட்டிக் ரெட்டினோபதி’ எனப்படும் விழித்திரை கோளாறு தோன்றுகிறது. சர்க்கரை நோய் ஏற்படும்போது இயல்பாகவே உடலில் ரத்த ஓட்டம் குறையும்.
அப்போது விழித்திரைக்கு செல்லும் ரத்தக்குழாய்களும் பலகீனமாகி, ரத்தத்தில் இருக்கும் நீர் கசிந்து வெளியேறி, திசுக்களில் கலந்து சொதசொதப்பாக ஆகிவிடும். சிலருக்கு ரத்தமும் கசிந்து வெளியேறும். அதன் ஆரம்பநிலையில் நோயாளிகளுக்கு அறிகுறி எதுவும் தெரியாது.
கண் பார்வையும் மங்காது. வழக்கமான கண் பரிசோதனைக்கு சர்க்கரை நோயாளிகள் செல்லும்போது அவர்களுக்கு ‘இன்டைரக்ட் ஆப்தமோல்ஸ்கோபி’ பரிசோதனை செய்தால், தொடக்கத்திலே பாதிப்பை கண்டறிந்துவிடலாம்.
நவீன சிகிச்சை :
விழித்திரை பாதிப்புகளை நவீன முறையில் கண்டறிய ‘பண்டஸ் ப்ளோரெசின் ஆஞ்சியோகிராபி’ என்ற பரிசோதனை உள்ளது. ப்ளோரெசின் என்ற ‘டை’யை கை நரம்பில் செலுத்தவேண்டும்.
அது விழித்திரை நரம்புகளை சென்றடையும். அதன் மூலம் விழித்திரை நரம்புகள் எப்படி இயங்குகின்றன? அவைகளில் ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது? எங்கெங்கு அடைப்பு, கசிவு இருக்கிறது என்பதை எல்லாம் கண்டுபிடித்துவிடலாம்.
கண்களைத் தொடாமலே :
‘ஓ.சி.டி’ ( Optical Coherence Tomography) என்று அழைக்கப்படும் ‘ஆப்டிகல் கோகரன்ஸ் டோமோகிராபி’ பரிசோதனை.
இதை பயன்படுத்தி கண்களைத் தொடாமலே திசுக்களின் மாதிரியை சேகரித்துவிடலாம். லேசர் கதிர்களை அடிப்படையாகக்கொண்டு இந்த பரிசோதனை நடக்கும். இது விழித்திரை நரம்புகளின் அடர்த்தியை பலவிதங்களில் ஆய்வு செய்து, பாதிப்பை படங்களாக்கிதரும். அடுத்து ‘பி ஸ்கேன்’ (B Scan). அல்ட்ரா சவுண்ட் அலைகளை செலுத்தி விழித்திரை ஒட்டியிருக்கிறதா? பிரிந்திருக்கிறதா? என்று கண்டுபிடிக்கும் பரிசோதனை இதுவாகும்.
கவனிக்க :
சர்க்கரை நோயாளிகள் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், விழித்திரை என்பது வளரும் தன்மை கொண்டது அல்ல. விழித்திரையில் இருக்கும் ஒரு திசு இறந்துபோனால் கூட அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு நோயாளி வந்தால், விழித்திரையில் மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கத்தான் முடியுமே தவிர, இழந்த பார்வையை மீண்டும் பெற முடியாது.
அதனால் சர்க்கரை நோயாளிகள் விழித்திரை தொடர்புடைய பரிசோதனைகளை தவறாமல் செய்து, பாதிப்பு இருப்பின் உடனே சிகிச்சையை மேற்கொள்ளவது அவசியம்.