கடுமையான முயற்சியினால் மருத்துவ உலகில் புதிய சானை படைத்த 18 வயது தமிழச்சி!!

சிங்கப்பூரின் ஏ ஸ்டார் திறன் தேடல் விருதை தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட விஜயகுமார் ராகவி என்ற மாணவி வென்று சாதித்து காட்டியுள்ளார்.சிங்கப்பூரில் ஆண்டுதோறும் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொண்டு சிறப்பான படைப்புகளை சமர்ப்பிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏ ஸ்டார் திறன் தேடல் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான இந்த விருதுக்கு சுமார் 611 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களின் ஆராய்ச்சி படைப்புகளை சமர்ப்பித்திருந்தனர்.இதில், தமிழகத்தின் சென்னையில் பிறந்த விஜயகுமார் ராகவி(18) என்ற மாணவிக்கு பரம்பரை இதய நோய் ஆராய்ச்சிக்கு விருது கிடைத்துள்ளது.

இது குறித்து மாணவி கூறும் போது;  பரம்பரையாக ஏற்படும் இதய நோயான இதய தசை பெருக்க நோயால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, அரித்மியா எனப்படும் சீரற்ற இதயத் துடிப்பினால் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது.இதுபோன்ற இதய நோய்களை ஸ்டெம் செல் மருத்துவ சிகிச்சை மூலமாக குணப்படுத்துவது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தேன்.

இதய நோய்கள் பயாப்ஸி முறை மூலம் கண்டறியப்படுகிறது. இதயத் தசையின் சிறு பகுதியை வெட்டி அதன் மூலம் நோயின் அறிகுறியை கண்டறிவதே பயாப்ஸி. அதற்கு பதிலாக இரத்த மாதிரியின் மூலம் நோயை கண்டறிந்து குணப்படுத்துவது ஸ்டெம் செல் முறையாகும்.இதற்காக 2 ஆண்டுகள் கடினமாக உழைத்தேன். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.